Published : 25 Feb 2019 04:01 PM
Last Updated : 25 Feb 2019 04:01 PM

கோலியைப் பார்த்துதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன்: பாக். வீரர் பாபர் ஆசம் பெருமிதம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் பார்த்துத்தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன் என்று பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பெரும் பதற்றமாக இருந்து வருகிறது. ஆனால் எல்லைகளால் இருநாடுகளும் பிரிக்கப்பட்டு இருந்தாலும், வீரர்களின் மனங்கள் சிலநேரங்களில் ஒற்றுமையாக இருக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசம் சர்வதேச டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். டி20, ஒருநாள் போட்டிகளில் தனது பேட்டிங் சராசரியையும் 50 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார் பாபர் ஆசம். டி20 போட்டிகளில் 9 அரைசதங்கள் உள்பட 1,182 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னை விராட் கோலியுடன் ஒப்பிடுவது என்பது எனக்கு கிடைத்த பெருமை. விராட் கோலி பேட்டிங்கில் நிலைத்தன்மை உடைய வீரர், நல்ல மனநிலை கொண்ட வீரர்.  பேட்டை எடுத்துக்கொண்டு களத்துக்குள் வரும் ஒவ்வொரு போட்டியிலும் 100 சதவீதம் தனது திறமையை வெளிப்படுத்தி விளையாடக்கூடியவர் கோலி

நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கும்போது, விராட் கோலியைப் பார்த்துத்தான், கோலி போன்று வர வேண்டும் என்றுதான் விளையாடத் தொடங்கினேன். பாகிஸ்தான் இந்திய அணி வென்ற ஒவ்வொரு போட்டியிலும் கோலியின் பேட்டிங்கை ரசித்தேன்.

நான் என்னுடைய தவறுகளில் இருந்து தொடர்ந்து பாடம் கற்று வருகிறேன். என்னுடைய மூத்த வீரர்கள் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுவருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகமிக சிறந்த வீரராக வர வேண்டும். ஒருவீரருக்கு கிரிக்கெட்டில் திறமை, பொறுமை, உடற்தகுதி அனைத்தையும் வளர்ப்பது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிதான். பாகிஸ்தான் அனைத்து பிரிவு கிரிக்கெட்டிலும் முன்னணியில் இருப்பதே எனது ஆசை " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x