Published : 24 Feb 2019 10:50 AM
Last Updated : 24 Feb 2019 10:50 AM

உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல்: ‘கெட்டப்பழக்கங்கள்’ வேண்டாம்- இந்திய வீரர்களுக்கு விராட் கோலி நீண்ட எச்சரிக்கை

உலகக்கோப்பைக்கு முன்பாக அவ்வளவாக ஒருநாள் போட்டிகள் இல்லாமல் இருப்பது கடினம், இதனால் சவால்கள் அதிகம் என்று விராட் கோலி இந்திய அணியின் போட்டி ஷெட்யூல்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

 

ஆஸி.க்கு எதிராக 2 டி20, 5 ஒருநாள், பிறகு ஐபிஎல் என்று வருவது மீது கேப்டன் கோலி அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதிக ஒருநாள் போட்டிகளில்தான் உலகக்கோப்பைக்கு முன் விளையாட வேண்டும் என்று அவர் அபிப்ராயப்படுகிறார்.

 

“அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடுவதுதான் சரியானது இன்னும் சொல்லப்போனால் அர்த்தப்பூர்வமானது. ஆனால் இப்படித்தான் இன்றைய காலத்தில் தொடர்கள் உருவாக்கப்படுகின்றன, ஏறக்குறைய அனைத்திலும் நாங்கள் விளையாடுகிறோம். ஐபிஎல் இருக்கும் போது உலகக்கோப்பைக்கு முன்னதாக இன்னும் ஓரிரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இருப்பதுதான் பயனளிக்கும். அதிகமாக டி20 போட்டிகளில் ஆடுகிறோம்.

 

இது எங்களுக்கு மட்டுமல்ல இரு அணிகளுக்காகவும்தான் பேசுகிறேன்.

 

உலகக்கோப்பை அணியில் எந்த வீரர்கள் இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் ஆட்டம் ஒருநாள் ஆட்ட மாதிரியிலிருந்து பிறழக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அதாவது ஐபிஎல் போட்டிகளின் போது ஏற்படும் கெட்டப்பழக்கங்கள் கண்டு நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  மனரீதியாக மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கும் 15 வீரர்கள் உலகக்கோப்பையில் தேவை.

 

ஆகவே ஐபிஎல் விளையாடும் வீரர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கான சீரிய முயற்சி அவர்களுக்கு வேண்டும். வலையில் நுழைந்தவுடன் கெட்டப்பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு விட்டால் உத்வேகம் குறைந்து விடும். பேட்டிங் பார்மை இழந்து விடுவீர்கள். உலகக்கோப்பை போன்ற தொடரில் இழந்ததை மீட்பது கடினம். ஆகவே ஐபிஎல் விளையாடும் வீரர்களே உலகக்கோப்பையை மனதில் கொண்டு அணியின் தேவை என்னவென்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

 

உலகக்கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் பயிற்சிகள், பயணங்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள் சவாலானவை. ஒரு கிரிக்கெட் வீரராக நாம்தான் எவ்வளவு பயிற்சிகள் தேவை, என்ன ஓய்வு தேவை என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பந்தை நன்றாக அடிக்க முடிகிறது என்றால் எதற்காக 3 மணி நேரம் வியர்வை பிசுபிசுக்க நெட்டில் பயிற்சி எடுக்க வேண்டும்.

 

மேலும் ஐபிஎல் தொடரில் அவரவர் அணி நல்ல நிலையில் இருக்கும் போது வீரர்கள் 2-3 போட்டிகள் ஓய்வு எடுப்பது நல்லது. ஒவ்வொருவரும் நேர்மையாக தன்னால் என்ன முடியும் அல்லது முடியாது என்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யவில்லை எனில் பிற்பாடு இந்திய அணிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கான பொறுப்பையும் நாம் ஏற்க வேண்டும்.

 

இவ்வாறு நீண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x