Published : 06 Sep 2014 12:23 PM
Last Updated : 06 Sep 2014 12:23 PM

அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் ஃபெடரர்-சிலிச் மோதல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், குரேஷியாவின் மரின் சிலிச்சும் மோதுகின்றனர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடை பெற்ற காலிறுதியில் 17 கிராண்ட்ஸ் லாம் பட்டங்கள் வென்றவரான ரோஜர் ஃபெடரர் 4 6, 3 6, 6 4, 7 5, 6 2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்பில்ஸை தோற்கடித்தார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் 9-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களையும் மான்பில்ஸ் கைப்பற்ற, பரபரப்பு ஏற்பட்டது. 3-வது செட்டில் சுதாரித்துக் கொண்ட ஃபெடரர் அந்த செட்டை கைப் பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 4-வது செட்டில் கடைசி நேரத்தில் அபாரமாக ஆடி அந்த செட்டை கைப்பற்றிய ஃபெடரர், 5-வது செட்டை மிக எளிதாக தன்வசமாக்கி போட்டியை வெற்றியில் முடித்தார்.

599-வது வெற்றி

இந்த வெற்றியோடு சேர்த்து “ஹார்ட் கோர்ட்டில்” 599-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஃபெடரர். 2011-க்குப் பிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி யிருக்கும் ஃபெடரர், வெற்றி குறித்துப் பேசுகையில், “மான்பில்ஸ் மிகச்சிறப்பாக ஆடினார். நான் முதல் இரு செட்களை அவரிடம் இழந்தபோதிலும், மான் பில்ஸால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாது என்பது எனக்கு தெரியும். ஏனெனில் எஞ்சிய செட்களில் என்னால் சிறப்பாக ஆட முடியும் என்பது எனக்கு தெரியும்” என்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 36-வது முறையாக அரையிறுதிக்கு முன்னே றியிருக்கும் ஃபெடரர், அதில் மரின் சிலிச்சை சந்திக்கவுள்ளார். இதற்கு முன்னர் சிலிச்சுடன் 5 முறை மோதியுள்ள ஃபெடரர், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு…

போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள மரின் சிலிச் தனது காலிறுதியில் 6-2, 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார். இதன்மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் குரேஷிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

1996-ல் அமெரிக்க ஓபனில் அரை யிறுதிக்கு முன்னேறிய குரேஷியாவின் கோரன் இவானிசெவிச்தான் இப்போது சிலிச்சின் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வி கண்டது.

ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-இத்தாலியின் பிளேவியா பென்னட்டா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சானியா-பிளாக் ஜோடியை தோற்கடித்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்கவிருக்கிறார் ஹிங்கிஸ். 2002-ல் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் விளையாடிய ஹிங்கிஸ், அதன்பிறகு இப்போதுதான் இறுதிச்சுற்றில் விளையாடவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x