ஆசிய விளையாட்டில் சர்ச்சை: பாலியல் புகாரில் சிக்கிய பாலஸ்தீன கால்பந்து வீரர் கொரியாவிலிருந்து வெளியேற தடை

ஆசிய விளையாட்டில் சர்ச்சை: பாலியல் புகாரில் சிக்கிய பாலஸ்தீன கால்பந்து வீரர் கொரியாவிலிருந்து வெளியேற தடை
Updated on
1 min read

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த பாலஸ்தீன கால்பந்து வீரர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கினார். அது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீஸார், சம்பந்தப்பட்ட வீரர் தென் கொரியாவை விட்டு வெளியேற தடை விதித்துள்ளனர்.

ஆனால் அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை. 20 வயதான அந்த வீரர், விளையாட்டு கிராமத்தில் உள்ள சலவையகத்தில் இருந்த 25 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்சியோனில் உள்ள நம்டோங் காவல் நிலைய தலைமை கண்காணிப்பாளர் கிம் ஹியூன் ஜா கூறுகையில், “சம்பந்தட்ட வீரர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்து

விடுவோம். சம்பந்தப்பட்ட வீரர் மீது முறையான குற்றச்சாட்டை பதிவு செய்வது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் முடிவெடுப்பர்” என்றார்.

விளையாட்டு கிராமம் கடந்த வெள்ளிக்கிழமை வீரர்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள 2-வது சம்பவம் இது. முன்னதாக அன்சான் கால்பந்து மைதானத்தில் இருந்த தன்னார்வலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஈரான் கால்பந்து அணியின் தொழில்நுட்ப பிரிவு மேலாளரிடம் இதேபோன்று விசாரணை நடத்தப்பட்டது என சியோல் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை தொடங்குகிறது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பாலஸ்தீன கால்பந்து வீரர் பாலியல் புகாரில் சிக்கியுள்ள விவகாரம் பெரும்சர்ச்சையை கிளப்பியிருப்பதோடு, சக வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in