Published : 03 Sep 2014 10:00 AM
Last Updated : 03 Sep 2014 10:00 AM

அமெரிக்க ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச், செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-1, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பிலிப்கோல்ஸ்கிரைபரை தோற்கடித்தார். இதன்மூலம் தொடர்ந்து 8-வது ஆண்டாக அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ந்து 22-வது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

ஜோகோவிச் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை சந்திக்கிரார். ஆன்டி முர்ரே தனது 4-வது சுற்றில் 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் சோங்காவை தோற்கடித்தார். இதுவரை சோங்காவுடன் 11 முறை மோதியுள்ள முர்ரே, அதில் 9 முறை வெற்றி கண்டுள்ளார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 7-5, 4-6, 7-6 (7), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டாமி ராபர்ட்டோவை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நிஷிகோரி 4-6, 7-6 (4), 6-7 (6), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை தோற்கடித்து அமெரிக்க ஓபனில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். 2 மணி நேரம், 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விடாப்பிடியாக போராடி வெற்றி கண்டார் நிஷிகோரி.

செரீனா-பென்னட்டா மோதல்

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவும் மோதவுள்ளனர். செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் கயா கனேபியை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த ஆண்டில் முதல்முறையாக கிரண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா.

போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் பிளேவியா பென்னட்டா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கேஸி டெல்லக்காவை தோற்கடித்தார். 32 வயதாகும் பென்னட்டா, அமெரிக்க ஓபனில் 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

புச்சார்டு தோல்வி

போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த கனடாவின் யூஜீனி புச்சார்டு 6-7 (2), 4-6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் எக்டெரினா மகரோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். பெலாரஸின் அசெரன்கா 4-6, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குரூனிச்சை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார்.

பயஸ் அவுட்

இந்தியாவின் முன்னணி வீரரான பயஸ் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் தோல்வி கண்டுள்ளார். இரட்டையர் 3-வது சுற்றில் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி 2-6, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ்-மார்க் லோபஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.

கலப்பு இரட்டையர் காலிறுதியில் பயஸ்-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 4-6, 6-4, 8-10 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-மெக்ஸிகோவின் சான்டியாகோ கென்ஸாலேஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.

அரையிறுதியில் சானியா

இந்தியாவின் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கும், மகளிர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கும் முன்னேறியுள்ளார்.

கலப்பு இரட்டையர் காலிறுதியில் சானியா மிர்சா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி 7-5, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஸ்லோவேனியாவின் கேத்ரினா ஸ்ரீபோட்னிக் ஜோடியைத் தோற்கடித்தது. சானியா ஜோடி தங்களின் அரையிறுதியில் சீன தைபேவின் யங் ஜன் சான்-பிரிட்டனின் ராஸ் ஹட்சின்ஸ் ஜோடியை சந்திக்கவுள்ளது.

மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் கிளாரா-செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச் ஜோடியை வீழ்த்தியது. அடுத்த சுற்றில் சீனாவின் இ-பான் ஸூ-கஜகஸ்தானின் டியாஸ் ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x