Last Updated : 04 Feb, 2019 02:02 PM

 

Published : 04 Feb 2019 02:02 PM
Last Updated : 04 Feb 2019 02:02 PM

ஐசிசி ஒருநாள் தரவரிசை: தோனி சூப்பர் ஜம்ப் அசைக்க முடியாத இடத்தில் கோலி, ரோஹித், பும்ரா

ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் அசைக்கமுடியாமல், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 48 ரன்களும் சேர்த்த விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி 3 இடங்கள் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளனர். 10-வது இடத்தில் ஷிகர் தவண் (744) உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3 அரைசதங்கள் அடித்து தொடர்நாயகன் விருது வென்ற தோனி(688) 3 இடங்கள் முன்னேறி 17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

3-வது இடங்களில் இருந்து 9-ம் இடங்கள் வரை முறையே நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், இங்கிலாந்தின் ஜோய் ரூட், பாகிஸ்தானின் பாபர் ஆஸம், தெ. ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ், மே.இ.தீவுகள் வீரர் ஷாய் ஹோப், தெ.ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தானின் பக்கர் ஜமான் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 719 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 709 புள்ளிகளுடன் யஜுவேந்திர சாஹல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளார்.

கேதார் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 7-வது இடத்திலும் உள்ளனர். 8 முதல் 10 இடங்கள் வரை இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், முஜிப் ரஹ்மான், ஜோஷ் ஹேசல்வுட் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் எந்த இந்திய வீரர்களும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x