

ஆஸ்திரேலிய அணியை 'பேபி சிட்டர்கள்' போல் சித்திரித்து எடுக்கப்பட்ட விளம்பரத்தில் வீரேந்திர சேவாக் நடித்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆஸி. முன்னாள் வீரர் மாத்யூ ஹேடன் கோபத்துடன் ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்த், டிம் பெய்ன் இடையே உருவான 'பேபி சிட்டர்' (குழந்தை பராமரிப்பவர்) வாக்குவாத விவகாரம் விளம்பரமாக தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 24-ம் தேதி முதல் இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கு முன்னோட்ட விளம்பரமாக குழந்தைகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆடை அணிவிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
இந்த விளம்பரத்தில் நடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், குழந்தைகளைப் பராமரிப்பது போன்று, ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் குறித்தும் பேசுவது போன்று விளம்பரம் எடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியத் தொடருக்கு இந்திய அணி சென்றிருந்தபோது, கேப்டன் டிம் பெய்ன், இந்திய வீரர் ரிஷப் பந்த் இடையே வார்த்தைச் சீண்டல் நடந்தது. அப்போது, ரிஷப் பந்திடம் கூறிய பெய்ன், "நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு சினிமா சென்றால், குழந்தையை பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டராக இரு. தோல்வி அடைந்தவுடன் நாட்டுக்குச் சென்றுவிடாதே" என்று கிண்டலாகக் கூறினார். அதற்குப் பதலடியாக, தற்காலிக கேப்டன் இதைச் சொல்கிறார் என்று ரிஷப் பந்த் பேசி இருந்தார்.
அதனால், இந்த விளம்பரத்தில் நடித்த வீரேந்திர சேவாகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தங்கள் அணியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
மாத்யூ ஹேடன் ட்விட்டரில் கூறுகையில், "உங்களை எச்சரிக்கிறோம். ஆஸ்திரேலிய அணியை ஒருபோதும் நையாண்டி செய்து, நகைச்சுவையாக எடுக்காதீர்கள் வீரேந்திர சேவாக். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா விளம்பரத்தில் நீங்கள் நடித்ததைப் பார்த்தேன். உலகக் கோப்பை வரட்டும், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எந்த அணி பேபி சிட்டராக வரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வரும் 24-ம் தேதி பெங்களூரில் முதல் டி20 போட்டியும், 27-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2-வது போட்டியும் நடைபெறுகிறது.
ஒருநாள் தொடர் மார்ச் 2-ல் ஹைதராபாத்திலும், மார்ச் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது போட்டி 8-ம் தேதி ராஞ்சியிலும், 10-ம் தேதி மொஹாலியிலும், 13-ம் தேதி 5-வது போட்டி டெல்லியிலும் நடக்கிறது.