

தோனியை நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் உயர்வு நவிற்சி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது சாதனைகளே பேசும், ஏன் மற்றவர்கள் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்.
“அவரது சாதனைகளே அவருக்காகப் பேசும். அதாவது அவர் அவ்வளவு பிரமாதமான பிளேயர் என்று கூறுகிறேன். குறிப்பாக இந்திய ஊடகங்களில் சில அவர் உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டுமா கூடாதா என்று விவாதித்து சப்தமெழுப்பி வருகின்றனர். நான் கூறியது போல் அவரது சாதனைகளே அவருக்காகப் பேசும்.
அவர் மிடில் ஆர்டரில் அமைதியான ஒரு வீரர். அவருக்குப் பந்து வீசும் போது இவரை வீழ்த்தும் வரை நமக்கு வெற்றி சாத்தியமில்லை என்ற எண்ணத்துடன் தான் அனைவரும் வீசுவர். ஆனால் நாளை அவரை வீழ்த்தி இந்திய பேட்டிங் ஆர்டரை ஹாமில்டன் போல் ஊடுருவுவோம்.
இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மென்கள் தற்போது பிறநாட்டு டாப் 3-யை விட சராசரியில் 20 ரன்கள் கூட வைத்துள்ளனர் என்பதே உண்மை. ஆகவே கடந்த போட்டியின் வெற்றியில் ரிலாக்ஸ் ஆகும் பேச்சுக்கே இடமில்லை. போல்ட் சரியான இடங்களில் வீசி ஸ்விங் செய்து பேட்டிங் வரிசையில் பாய்ச்சலை நிகழ்த்தினார், அதை மீண்டும் நாளை செய்வோம்.” என்றார் ஜேம்ஸ் நீஷம்.