Published : 07 Feb 2019 07:26 PM
Last Updated : 07 Feb 2019 07:26 PM

வேகப்பந்து அச்சுறுத்தலுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்குக் காத்திருக்கும் அதிரடி அதிர்ச்சி மருத்துவம்: அணி அறிவிப்பு

டெஸ்ட் போட்டிகளில் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சின் எழுச்சியைக் கண்டு மடிந்த இங்கிலாந்து அணி இன்னும்  மீளாத நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

39 வயதாகும் கெய்ல் இன்னமும் கூட ஓர் அச்சுறுத்தல்தான், கடைசியாக இவர் கடந்த ஜூலையில் மே.இ.தீவுகளுக்காக ஆடினார். இப்போது மற்றொரு சரவெடி தொடக்க வீரர் எவின் லூயிஸ் உடன் தொடக்க வீரராக இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறார்.

 

இன்று அறிவிக்கப்பட்ட 14 வீரர்கள் கொண்ட அணியில் எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளனர்.

 

மே.இ.தீவுகள் அணித்தேர்வுக்குழு தலைவர் கார்ட்னி பிரவுன் அணித்தேர்வு பற்றி கூறும்போது, “கிரிக்கெட் உலகக்கோப்பைத் தயாரிப்பை நாங்கள் தொடரும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியான இங்கிலாந்துடன் ஆடுவது நம் அணி எந்த நிலையில் உள்ளது என்பதைக் கணிக்க உதவும்” என்றார்.

 

அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 23 ஒருநாள் சதங்களுடன் மே.இ.தீவுகளில் அதிக சதம் எடுத்த வீரராகத் திகழ்கிறார், ஒருநாள் போட்டிகளில் 9,727 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு முன்னால் பிரையன் லாரா 10,405 ரன்களுடன் இருக்கிறார்.

 

 

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2015 ஆஸ்திரேலியா உலகக்கோப்பையில் 215 ரன்கள் எடுத்து அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருக்கான மே.இ. சாதனைக்கும் சொந்தமானார் கிறிஸ் கெய்ல்.

 

கெய்ல், எவின் லூயிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், டேரன் பிராவோ தவிர ஷேய் ஹோப்பும் இப்போது அதிரடி முறைகளுக்குத் திரும்பியுள்ளார். எனவே இங்கிலாந்துக்கு பெரும் அதிரடி அச்சுறுத்தல் காத்திருக்கிறது..

 

மே.இ.தீவுகள் அணி வருமாறு: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், தேவேந்திர பிஷூ, டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மையர், ஷேய் ஹோப், எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், நிகோலஸ் பூரன், ரோவ்மன் போவெல், கிமார் ரோச், ஒஷேன் தாமஸ்.

 

போட்டி அட்டவணை:

 

பிப்ரவரி 20, 22, 25, 27, மார்ச் 2 ஆகிய தேதிகளி 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x