Published : 15 Sep 2014 12:29 PM
Last Updated : 15 Sep 2014 12:29 PM

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: `செபி’ தலைவர் யு.கே.சின்ஹா எச்சரிக்கை

பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) வகுத்தளித்த விதிகளை மீறுவோர் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தலைவர் யு.கே. சின்ஹா எச்சரித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

உள்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் மிக மோசமான குற்றங்கள் புரிவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேசயமம், குற்றம் என்றே தெரியாமல் சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். இவர்களது தவறால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமலிருந்தால் அதை பெரிய குற்றமாக கருத மாட்டோம். ஆனால் ஒரே குற்றத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து புரிவோருக்கு மன்னிப்பே கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களை வெகுவாகப் பாதித்த குற்றங்களை புரிந்தவர்கள் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. நிவாரணம், தீர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் மிகவும் வலுவாக உள்ளன. அமெரிக்க பங்குச் சந்தையில் உள்ளதைக் காட்டிலும் சிறப்பான விதிமுறைகள் உள்ளன. நமது விதிமுறைகளை சில நாடுகளின் பங்குச் சந்தைகளும் பின்பற்றுகின்றன. இதில் பிரிட்டன் பங்குச் சந்தை குறிப்பிடத்தக்கது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

செபி விதிமுறைகளை இனி எந்த நீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்காட முடியாது. இதை மேலும் சிறப்பாக விரிவான வழிகாட்டுதலை செபி வகுத்து வருகிறது. செட்டில்மென்ட் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு தேவையான விதிகள் வகுக்கப்படுகின்றன. இப்போது செபி-க்கு உள்ள அதிகாரத்தின்படி வழக்கு தொடர்வதா அல்லது தீர்வை வழங்கி முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை பெற்றுத் தருவதா என்பதை தீர்மானிக்க முடியும்.

இதற்கு முன்பு முதலீட்டாளர்களை பாதிக்கும் வகையிலான குற்றம் புரிந்தவர்கள் தப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. இத்தகைய வழக்குகளை செபி ஏற்பதா என்பது குறித்து தீர்பாயம் முடிவு செய்ய வேண்டிய நிலை முன்பிருந்தது. ஆனால் இப்போது இத்தகைய பிரச்சினைகளைக் கையாள செபி முடிவெடுக்க முடிகிறது. மேலும் இந்த பிரச்சினைகளை எளிதாகக் கையாள விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று சின்ஹா குறிப்பிட்டார்.

சில குற்றங்களை கிரிமினல் குற்றமாகக் கருதி அவற்றின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கச் செய்வது மற்றும் சில சிறிய குற்றங்களை அவற்றின் தன்மைக்கேற்ப நடவடிக்கை எடுக்க வகை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை செபி மேற்கொள்ள வழியேற்பட்டுள்ளது. பெரிய குற்றங்களை புரிந்தவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தங்களுடைய தவறை உணராமல் தப்பிக்கவே முடியாது.

சமரச தீர்வு காண வரும் நிறுவனங்களை அதன் மேம்பாட்டாளர்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு அதை தொடர்வதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்வோம். சம்பந்தப்பட்ட நிறுவன மேம்பாட்டாளர் தொடர்ந்து தவறு செய்பவராக இருந்தால் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது. இவரது தவறால் நிறுவனமோ அல்லது முதலீட்டாளர்களோ பாதிக்கப்பட்டுள்ளனரா? பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆராயப்படும்.

தாமாக முன்வந்து சமரச முயற்சியை நிறுவனம் மேற்கொண்டதா அல்லது செபி கண்டுபிடித்தபிறகு சமரச முயற்சிக்கு வந்ததா என்பதும் கவனத்தில் கொள்ளப்படும். இவை அனைத்தையும் ஆராய்ந்த பிறகே சமரச தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இத்தகைய நடவடிக்கைகளை இந்தியாவை பார்த்து பிரிட்டனிலும் பின்பற்றப்படுகிறது. அவர்களும் இதுபோன்ற விதிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். பங்குச் சந்தையில் உள்பேர வணிகம் என்பது மிகவும் மோசமான குற்றமாகும். இதேபோல விதிகளுக்குப் புறம்பாக அதிக அளவில் பங்குகளை வாங்கி நிறுவனத்தைக் கையகப்படுத்தும் குற்றமும் மோசமானது என்று சின்ஹா குறிப்பிட்டார்.

நிதி நிறுவன மோசடி:

பொதுமக்களிடம் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்து நிதி திரட்டி ஏமாற்றும் நிறுவனங்கள் குறித்து மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் குறித்து முன்னதாகவே செபி-க்கு தகவல் அளித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில புலனாய்வு அமைப்புகள் உதவலாம்.

இதன் மூலம் பெருமளவிலான பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்க முடியும் என்று சின்ஹா குறிப்பிட்டார். புதிய விதிமுறையின்படி ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் நிதி திரட்டும் அனுமதி பெறாத நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்க வழியேற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x