Published : 02 Feb 2019 12:33 PM
Last Updated : 02 Feb 2019 12:33 PM

நாளை 5-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் தோனி விளையாடுவாரா?- சஞ்சய் பங்கர் பதில்

வெலிங்டனில் நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தோனி இடம் பெறுவாரா என்பது குறித்து அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பதில் அளித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளை வென்று தொடரை வென்றுவிட்டது.

வெலிங்டனில் நாளை 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

ஹேமில்டனில் நடந்த 4-வது போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிக மோசமாக பேட் செய்தனர். முக்கிய பேட்ஸ்மேன்கள் தோனி, கோலி இல்லாத அந்தப் போட்டியில் பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தசைபிடிப்பு காரணமாகக் கடந்த இரு போட்டிகளில் தோனி பங்கேற்காமல் இருந்து வந்தார். இது அணியைப் பெரும் நெருக்கடியில் தள்ளிவிட்டது.

இதனால், நாளை வெலிங்டனில் நடைபெறும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து அணியின் துணைப்பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "தோனி உடல்நலம் தேறிவிட்டார். பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆதலால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவார். ஆனால், அணியில் விளையாடும் இறுதி11 வீரர்கள் இன்னும் முடிவாகவில்லை" எனத் தெரிவித்தார்.

கடந்த இரு போட்டிகளில் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு இருந்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராயுடுவுடன் சேர்ந்து 77 ரன்கள் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் சேர்த்தார்.

ஆனால், 4-வது போட்டியில் டக்அவுட்டில் வெளியேறினார். ஆதலால், கார்த்திக்குப் பதிலாக தோனி இடம் பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கோலிக்குப் பதிலாக இடம் பெற்றுள்ள சுப்மான் கில் நீக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. பந்துவீச்சில் கடந்த 4-வது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பெறுவார். கலீல் அகமது நீக்கப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x