Published : 25 Feb 2019 03:16 PM
Last Updated : 25 Feb 2019 03:16 PM

தோனி, ப்ளீஸ் ஓய்வு பெறுங்கள்; தேசிய வில்லன் உமேஷ் யாதவ்: இந்தியா தோல்விக்கு நெட்டிசன்கள் கொதிப்பு

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசிப் பந்தில் தோல்வி அடைந்தற்கு நெட்டிசன்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

குறிப்பாக கடைசி ஓவரில் 14 ரன்கள் சேர்த்தால் வென்ற வெற்றி என்கிற இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்காமல் ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவையும், பேட்டிங்கில் மந்தமாகச் செயல்பட்ட தோனியையும் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. 127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி கடைசிப்பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 19-வது ஓவரை வீசிய பும்ரா 2 ரன்கள் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளைப் பெற்று வெற்றியை நம் பக்கத்தில் விட்டுச்சென்றார்.

ஆனால், கடைசி ஓவரை வீசிய உமேஷ்யாதவ், வெற்றிக்கு தேவையான 14 ரன்களை 2 பவுண்டரிகள் அடிக்கவைத்து எளிதாக வாரிக்கொடுத்தார். அதேபோல தோனியும் நேற்று களத்துக்குள் வந்ததில் இருந்து மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் மட்டுமே சிக்ஸர் அடித்த தோனி அதற்கு முன் ஒருபவுண்டரிகூட அடிக்கவில்லை. 37 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார் தோனி. இதையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தோனி குறித்து நெட்டிசன்கள் கூறுகையில், " இன்னும் தோனி தான் மட்டும்தான் பேட்டிங் செய்ய முடியும் என நினைக்கிறார். 9 பந்துகளை ரன் சேர்க்காமல் தோனி வீணடித்துவிட்டார் அவரால் ரன் சேர்க்க முடியவில்லை" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், " தோனியின் பேட்டிங் முடிந்துவிட்டது" என்றும், " தோனி ப்ளீஸ் ஓய்வு பெற்றுவிடுங்கள், அல்லது உடல்நலக்குறைவில்லாமல் போய்விடுங்கள். இங்கிலாந்து உலகக் கோப்பைப் போட்டிக்கு நீங்கள் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. கடந்தகால நல்ல நினைவுகளை அழித்துவிடாதீர்கள்" என வேதனையுடன் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு ரசிகர், " தோனி மிகச்சிறந்த பேட்ஸ்மேன், அணியின் வெற்றிக்காக பலமுறை அருமையாக பேட் செய்துள்ளார். சிலநேரங்களில் இந்தியா வெற்றி பெற விளையாடியுள்ளார், சிலநேரங்களில் எதிரணி வெற்றி பெற ஆடியுள்ளார் " என மறைமுகமாக விமர்சித்துள்ளார். " தோனி 10 ரன்களை ஓடமறுத்து வீணாக்கியதை மறக்கமுடியவில்லை" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல உமேஷ் யாதவையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். குறிப்பாக 'தேசத்தின் வில்லன்' என்று தலைப்பிட்டு பலர் உமேஷ் யாதவை கிண்டல் செய்து மீம்ஸ்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x