

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ஆடியவிதம் அவமானத்துக்குரியது என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இயான் போத்தம், கிரீம் ஸ்வான் உள்ளிட்டோர் கடுமையாக சாடியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்று தொடரையும் இழந்துள்ள நிலையில், போத்தம் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைப் பார்த்து நான் கோபம் கொள்வது மிகவும் அரிது. ஆனால் எட்பாஸ்டனில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஆட்டம் காமெடியாக இருந்தது.
உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதற்காக வடிவமைக்கப்பட வேண்டிய அணி மிகக் கேவலமாக தோற்றுள்ளது. இங்கிலாந்து ஒருபோதும் தோல்வியில் இருந்து பாடம் கற்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்தனர். ஒருநாள் போட்டி மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அதற்கேற்றாற்போல் மாறவில்லை. பழைய காலத்தைப் போன்றே இப்போதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
கிரீம் ஸ்வான் கூறுகையில், “ஒருநாள் போட்டியில் தற்போதுள்ள சவால்களுக்கு ஏற்றவாறு இங்கிலாந்து அணியினர் தங்களை மாற்றிக்கொள் வதற்கு முயற்சி எடுக்கவில்லை. அது இப்போது அவர்களை தோல்வியில் தள்ளியுள்ளது” என்றார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெக் ஸ்டீவார்ட் கூறுகையில், “இங்கிலாந்து அணியின் வியூகம் மிகவும்பழமையானதாக இருக்கிறது.1995-ல் நாங்கள் விளையாடியதைப் போன்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே வீரர்களின் மனநிலை, போட்டி வியூகம் உள்ளிட்டவற்றில் மாற்றம் தேவைப்படுகிறது” என்றார்.