

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட நடிகர் மோகன்லாலை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷேவாக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்க வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்தி நடிகர் அக்ஷய் குமார், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை களமிறக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியானது. ஆனால், அரசியலில் குதிக்கும் திட்டமில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியலுக்கு வரமாட்டேன். பாஜகவில் சேரும் விருப்பமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் பாஜக சார்பில் ஹரியாணா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகின.
இதனை ஷேவாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘2014-ம் ஆண்டு வந்த வதந்திதான். தற்போதும் உலா வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. துளியும் உண்மையில்லை. அப்போதும் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை’’ எனக் கூறியுள்ளார். மேலும் ஷேவாக் மக்களவைத் தேர்தலில் போட்டி என வெளியான செய்தியையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.