

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதற்குக் கட்டுப்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேபோல, உலகக்கோப்பைப் போட்டியில் ஜூன் 16-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்திய அணி. இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்து வெளியேற்ற வேண்டும் என சில வீரர்களும் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே பிசிசிஐ சார்பில் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாகிஸ்தானுடன் இந்தியா உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடுவது குறித்து மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
இந்த போட்டிக்கு முன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
''முதலில் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும் தெரிவிக்கிறேன். அங்கு நடந்த தாக்குதலை நினைத்து இந்திய அணி அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
எங்களின் நிலைப்பாடு மிக எளிமையானது. தேசத்துக்கு என்ன தேவையோ அதுதான் எங்களுக்கும் தேவை. பிசிசிஐ என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் எங்களின் கருத்தும்.
மத்திய அரசும், கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு செய்தாலும், நாங்கள் அதன்படிதான் நடப்போம். அந்த முடிவுக்குக் கட்டுப்படுவோம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுதான் எங்கள் நிலைப்பாடு''.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.