Published : 14 Feb 2019 04:42 PM
Last Updated : 14 Feb 2019 04:42 PM

மீண்டும் வருகிறார் பிரித்வி ஷா: முஸ்டாக் அலி கோப்பையில் பங்கேற்பு?

காயத்தால் கடந்த மாதங்களாக ஓய்வில் இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா, வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள முஷ்டாக் அலி டி20 கோப்பையில் விளையாடுவார் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டிருந்த போது இளம் வீரர் பிரித்வி ஷா  உடன் சென்றிருந்தார். டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷாவின் ஆட்டத்தைக் காண இந்திய, ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால்,  பயிற்சிப் போட்டியில் பீல்டிங் செய்தபோது, கணுக்காலில் காயம் ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த பிரித்வி ஷா தற்போது காயம் குணமடைந்துள்ள நிலையில் முஷ்டாக் அலி டி20 போட்டியில் பங்கேற்க தயாராகியுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அஜித் அகர்கர் தலைமையிலான மும்பை கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு அடுத்த சில நாட்களில் முஷ்டாக் அலி தொடருக்கான மும்பை அணியை தேர்வு செய்ய இருக்கிறது. இதில் பிரித்வி ஷா இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மும்பை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

இதற்கிடையே உடல்நலம் நன்கு தேறிய நிலையில், மும்பை பாந்த்ராவில் உள்ள சச்சின் டெண்டுல்கர் இல்லத்துக்குச்சென்ற பிரித்வி ஷா, அவரிடம் பல்வேறு ஆலோசனைகளையும் கேட்டுள்ளார். பேட்டிங் குறித்தும், எதிர்காலத்தில் காயங்களை தவிர்க்கும் வகையில் எவ்வாறு விளையாடுவது ஆகிய ஆலோசனைகளையும் சச்சின் டெண்டுல்கரிடம் பிரித்வி ஷா பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், பிரித்வி ஷா, சச்சின் சந்திப்பு குறித்து எந்தவிதமான கருத்துக் கூற பிரித்வி ஷாவின் தந்தை பங்கஜ் ஷா ஊடகங்களிடம் மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x