Last Updated : 17 Feb, 2019 01:26 PM

 

Published : 17 Feb 2019 01:26 PM
Last Updated : 17 Feb 2019 01:26 PM

இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு: எதிர்ப்பைக் காட்டிய மும்பை கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மும்பையில் உள்ள புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா(சிசிஐ) தங்களின் ரெஸ்டாரண்டில் இருந்த இம்ரான் கானின் புகைப்படத்தை மறைத்துள்ளது

பிசிசிஐ அங்கீகாரம் பெற்ற அமைப்பான கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மும்பையில் மிகப் புகழ்பெற்றது. இந்த கிளப்புக்கு சொந்தமாக பார்போர்ன் கிரிக்கெட் மைதானமும் இருக்கிறது. இந்த மைதானத்தில் ஏராளமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் புல்வாமாவில் பாகிஸ்கான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி ஒருவர், சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலையையும், கொந்தளிப்பையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மும்பை கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா இம்ரான் கான் புகைப்படத்தை மறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் இந்தியா கிளப்புக்குள் புகழ்பெற்ற பார்பந்தர் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் உள்ளது. இங்குப் பிரபல கிரிக்கெட் வீரர்கள், விஐபிக்கள் உள்ளிட்டோர் வந்து செல்வார்கள்.

இங்கு உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தானுக்குப் பெற்றுக்கொடுத்த இம்ரான்கானின் புகைப்படமும் இங்குப் பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரெஸ்டாரண்டில் இருந்த இம்ரான் கான் புகைப்படம் துணி போர்த்தப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிசிஐ கிளப்பின் தலைவர் பிரேமால் உதானி கூறுகையில், " கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில் இன்றுள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எங்களால் முடிந்த எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இம்ரான் கான் புகைப்படத்தை மறைத்துவிட்டோம்.ஆனால், அந்தப் புகைப்படம் அகற்றப்படுவது குறித்து என்னால் கூற முடியாது " எனத் தெரிவித்தார்.

சிசிஐ கிளப்புக்கு சொந்தமான பார்போர்ன் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல போட்டிகள் நடந்துள்ளன. அதில் இரு போட்டிகளில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ளது. மேலும் கடந்த 1989-ம் ஆண்டு இந்த மைதானத்தில் நடந்த நேரு கோப்பையில் ஆஸ்திரேலிவை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்தப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை இம்ரான் கான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x