

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே–ஆப் சுற்றில் இந்தியா–செர்பியா அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. 14-ம் தேதி வரை 3 நாள்களுக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் விளையாடுகின்றனர். இரட்டையர் பிரிவில் மூத்த வீரர் லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
செர்பியாவைச் சேர்ந்த முதல்நிலை வீரர் நோவக் ஜோகோவிச், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியை அடுத்து டேவிஸ் கோப்பையில் விளையாடுவதை தவிர்த்து விட்டார். இது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
டேவிஸ் கோப்பை போட்டி குறித்து லியாண்டர் பயஸ் கூறியது:
செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இரட்டையர் ஆட்டத்தின் முடிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்று சோம்தேவ் கூறியுள்ளார். அந்த நெருக்கடியை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இப்போட்டியில் முதல்நாள் ஆட்டம் மிகவும் முக்கியமானது. எனினும் அது குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் இரு வீரர்களும் வலுவானவர்கள் என்றார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீஷன் அலி கூறியிருப்பது:
ஜோகோவிச் இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வருவதாக இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முன்னணி வீரர்கள் இந்தியா வந்து விளையாடுவது நமது இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். எனினும் அவர் எதிர்பாராதவிதமாக போட்டியில் பங்கேற்கவில்லை. இது செர்பிய அணிக்கு பின்னடைவு. நமது வீரர்கள் இப்போட்டிக்காக சிறப்பாக தயாராகியுள்ளனர்.
ஜோகோவிச் இல்லாத செர்பியா அணிக்கு நமது அணியினர் அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் வென்று நமது அணி உலக சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சோம்தேவ் சமீபத்தில் கண்ட தோல்வியால் ஏற்பட்ட தர வரிசை சரிவில் இருந்து மீண்டு நிச்சயம் வலுவாக வருவார். அவர் தர வரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடிப்பார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகி இருப்பது சோம்தேவின் தனிப்பட்ட முடிவு என்று அவர் கூறினார்.