Published : 24 Feb 2019 12:06 PM
Last Updated : 24 Feb 2019 12:06 PM

சென்னை சிட்டி - மோகன் பகான் இன்று மோதல்

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் இன்று மாலை 5 மணிக்கு கோவை நேரு விளையாட்டங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி - கொல்கத்தா மோகன்பகான் அணிகள் மோதுகின்றன.

சென்னை சிட்டி அணி இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடி 11 வெற்றி, 5 டிரா, 2 தோல்விகளுடன் 37 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மோகன் பகான் அணி 17 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 டிரா, 5 தோல்விகளுடன் 26 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி வெற்றி பெறும் பட்சத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான வழி முறைக்கு மிக நெருக்கமாக செல்லும். ஏனெனில் சென்னை சிட்டி அணிக்கு அடுத்தப்படியாக புள்ளிகள் பட்டியலில் ஈஸ்ட் பெங்கால் (32), ரியல் காஷ்மீர் (32) அணிகள் உள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை தலா 16 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இந்த வகையில் ரியல் காஷ்மீர் அணிக்கு இரு ஆட்டங்கள் உள்ளன.

அந்த அணி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியன் ஏரோஸ் அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியுடன் வரும் 28-ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டத்துக்கு முன்னதாக ஈஸ்ட் பெங்கால் அணி நாளை ஐஸ்வால் அணியை சந்திக்கிறது. இதன் பின்னர் தனது கடைசி ஆட்டத்தில் வரும் 3-ம் தேதி பஞ்சாப் மினர்வா அணியை எதிர்கொள்கிறது ஈஸ்ட் பெங்கால் அணி.

அதேவேளையில் சென்னை சிட்டி அணிக்கு இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் இரு ஆட்டங்களே உள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை பெறுவதில் சென்னை சிட்டி அணி கவனம் செலுத்தக்கூடும். அணியின் முன்னணி டிபன்டரான ராபர்டோ எஸ்லாவா காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார். அனுபவ வீரரான அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும். இதற்கிடையே இன்றைய போட்டியைக் காண கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சிட்டி அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறுகையில், “ தொடரில் அதிக புள்ளிகளை நாங்கள் பெற்றிருக்கும் நிலையில் நாளை (இன்று) எங்களுக்கு முக்கியமான ஆட்டம் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, பட்டத்தை இறுதியில் வெல்வோம். இந்த நல்ல வாய்ப்பை நாங்கள் கைவிடுவதற்கு எங்களிடம் எந்தக் காரணமும் இல்லை. முக்கியமான ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் காயமடைந்திருந்த உள்ளூர் வீரர்கள் ஸ்ரீராம், ஷாகபாஸ் ஆலம் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பி உள்ளது மிகவும் முக்கியமானது” என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x