Published : 28 Feb 2019 11:16 AM
Last Updated : 28 Feb 2019 11:16 AM

பேட் செய்யாத போது கூட கோலி, தோனி என்று ரசிகர்கள் இடைவிடாது கத்திக்கொண்டேயிருந்தால்...எப்படி ஆடுவது?: பதிலடி விருந்து கொடுத்த கிளென் மேக்ஸ்வெல்

பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 113 ரன்கள் விளாசி இந்திய அணியை ஓட விட்ட கிளென் மேக்ஸ்வெல் மிகப்பெரிய இலக்கை அனாயசமாக விரட்டி ஆஸி.க்கு ஒரு தொடர் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

 

முதல் போட்டியில் சொதப்பியதற்கு இந்திய அணியினர் பிட்சைக் குறை கூறி, மிகவும் கடினமான பிட்ச் என்று கூறினர், ஆனால் நேற்று ஸ்கோர் 200க்கும் மேல் சென்றிருக்க வேண்டும், ஆனால் சுனில் கவாஸ்கர் பரிந்துரைப்படி சேர்க்கப்பட்ட ஷிகர் தவண் கிரிக்கெட் மறந்தது போல் ஆடினார்.  இடையில் 7 ஓவர்களுக்குப் பிறகு பவுண்டரிகள் வறண்டன. இதனால் 200 ரன்களுக்கும் மேல் ஸ்கோர் போக வேண்டிய பிட்சில் கோலி, தோனி அதிரடியினால் இந்திய அணி 200க்கும் சற்று குறைவாக எடுத்தது.

 

இருப்பினும் 190 ரன்களை விரட்டுவது பெங்களூரு மட்டைப் பிட்சில் அவ்வளவு கடினமானதல்ல என்பதை விட பவுலிங், பீல்டிங் அதனை கடினமாக்க வேண்டும், ஆனால் இந்திய அணியில் பும்ராவைத் தவிர மற்றவர்கள் கிளென் மேக்ஸ்வெலுக்கு பூவினால் அர்ச்சனை செய்தது போல் பவுலிங் செய்தனர்.

 

ரசிகர்கள் கோலி, தோனி என்று கத்திக் கொண்டேயிருந்தாலும் கிளென் மேக்ஸ்வெல் அவ்வப்போது அவர்கள் கூக்குரலை அடக்க்குமாறு சில பந்துகளை ஸ்டேடியத்துக்குப் பறக்க விட்டார்.

 

இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் கூறும்போது, “மிகவும் கடினம்.... இந்த இடத்தில் இந்த ரசிகர்கள் மத்தியில் ஆடுவது கடினம்.  தோனியும் கோலியும் பேட் செய்யாத போது கூட நாள் முழுதும் கத்திக் கொண்டேயிருந்தால் கவனம் செலுத்துவது கடினம்.” என்றார்.

 

முக்கியக் கட்டத்தில் பும்ரா வீசிய போது அவர் ஓவரில் 12 ரன்களை அடித்தார் கிளென் மேக்ஸ்வெல் அது குறித்து அவர் கூறிய போது, “நான் அவரை அடித்து ஆடவே எப்போதும் முயல்வேன். கடைசி 4 ஓவர்களில் 43-44 ரன்கள் தேவை, பும்ரா பந்து வீச வந்தார், அது முக்கியமான ஓவர்.  அந்த ஓவரில் 4-5 ரன்கள் மட்டுமே வந்திருந்தால் பிறகு ஒவருக்கு 13 ரன்கள் தேவை என்று ரன் விகிதம் எகிறியிருக்கும். 6 நல்ல யார்க்கர்கள் மட்டுமே அப்போது ரன் விகிதத்தை ஓவருக்கு 18-19 என்று எடுத்துச் செல்லும். அப்போதுதான் இரண்டு யார்க்கர்களை அவர் சரியாக வீசவில்லை அதில் பவுண்டரி அடித்தேன்.

 

அந்த ஓவரில் பும்ராவை 2 பவுண்டரிகள் அடித்தேன். அது ரன் விகிதத்தை சரியாக வைத்திருந்தது, சித்தார்த் கவுலை அடுத்த ஓவரில் இலக்காக்கி அடித்தேன், அதினால் கடைசி 12 பந்துகளில் 14 என்று ஆனது” என்றார் மேக்ஸ்வெல்

 

களவியூகத்துக்கு எதிரான அருமையான சாதுரியத்துடன் பேட் செய்தார் மேக்ஸ்வெல். உமேஷ் யாதவ் ஒரு மேட்சில் தவறு செய்ததற்காக அணியிலிருந்து நீக்கி, அனுபவமற்ற சித்தார்த் கவுலைக் கொண்டு மலையுடன் மோதவிட்டால் என்ன ஆகுமோ அதுதான் நேற்று நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x