Published : 18 Feb 2019 12:33 PM
Last Updated : 18 Feb 2019 12:33 PM

பிரபலங்கள் என்றாலே தீவிரவாதத்தைக் கண்டிக்க வேண்டும் என்று அவசியமில்லை: சானியா ஆவேசம்

பிரபலங்கள் என்றாலே சமூக வலைதளங்களில் தீவிரவாதத்தைக் கண்டிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்று நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஆதில் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினார். இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் சானியா மிர்சா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில், இதுகுறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார் சானியா மிர்சா.அதில், ''பிரபலங்கள் என்றாலே கருத்து சொல்ல வேண்டும்; தீவிரவாதத் தாக்குதலைப் பொதுவெளியில் குறிப்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கண்டிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்தப் பதிவு.

பதிவுகள்  மூலமாகத்தான் தேசப்பற்றையும் நாட்டின் மீதான அக்கறையையும் காண்பிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஏன்? ஏனெனில் நாங்கள் பிரபலங்கள். விரக்தியில் இருக்கும் தனிப்பட்ட நபர்கள் சிலர் தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்க இடமில்லாமல் எங்களின் மீது கொட்டுகிறீர்கள். முடிகிற இடங்களில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறீர்கள்.

தீவிரவாதத் தாக்குதலை நான் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை. நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்று மேலிருந்து கத்த வேண்டிய தேவையும் இல்லை.

நான் தீவிரவாதத்துக்கும் அதைப் பரப்புவர்களுக்கும் எதிரானவள்தான். நல்ல புத்தியோடு இருக்கும் அனைவரும் தீவிரவாதத்தை எதிர்ப்பர். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். வியர்வை சிந்துகிறேன். அப்படித்தான் நாட்டுக்காகச் சேவையாற்ற முடியும்.

சிஆர்பிஎப் வீரர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். பிப்.14 இந்தியாவின் கறுப்பு நாளாக மாறிவிட்டது. இதுபோன்று இன்னொரு தினம் ஏற்படவே கூடாது.

நாங்கள் அமைதியைப் பரப்புகிறோம்; ஆனால் நீங்கள் வெறுப்பை விதைக்கிறீர்கள். கோபம் என்பதை நல்ல விஷயங்களுக்குக் காட்டினால் நல்லது. மற்றவர்களைக் கிண்டல் செய்து நீங்கள் எதையும் அடையப் போவதில்லை. வெறுமனே உட்கார்ந்து தாக்குதல் பற்றிப் பிரபலங்கள் எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறார்கள் என்று எடை போடுவதையும் விமர்சிப்பதையும் விடுத்து, நாட்டுக்கு எதையாவது செய்ய முயலுங்கள்.

உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். எங்களால் முடிந்ததை சமூக வலைதளங்களில் சொல்லாமலே நாங்கள் செய்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார் சானியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x