Published : 16 Feb 2019 03:13 PM
Last Updated : 16 Feb 2019 03:13 PM

தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பைக்கு தேவை, ஓபனிங் இறக்குங்கள்: சுனில் கவாஸ்கர் ஆதரவு

உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம் பெற வேண்டும், அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் வாய்ப்புளிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், ஒருநாள் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், " உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக சில போட்டிகளில் வாய்ப்பளிக்கவே ரிஷப்பந்தை தேர்வு செய்தோம்" எனத் தெரிவித்தார். சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறி, தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாதது குறித்து கூறவில்லை.

இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல், ரஹானே, ரிஷப் பந்த் யாரையும் களமிறக்கத் தேவையில்லை, தினேஷ் கார்த்திக்கை களமிறக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. என்னுடைய கணப்பில் 13 வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.

அதில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு.

மற்றவகையில் கே.எல். ராகுல், அஜிங்கிய ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோரைச் சேர்ப்பதைக் காட்டிலும், தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பைப் போட்டிக்கு எடுக்கலாம். மிகச்சிறந்த தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக் இருப்பார்.

14-வது வீரராக விஜய் சங்கர் இருக்கலாம். ஏனென்றால், இங்கிலாந்தில் பந்து நன்றாகஸ்விங் ஆகும். அப்போது இந்திய அணி ஹர்திக்பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரு ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கலாம். கலீல் அகமெட், முகமது சிராஜ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை. உமேஷ் யாதவை மாற்று வீரராக மட்டுமே வைத்திருக்கலாம்.

அணியில் எப்போதும் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றிக் களமிறக்கும் போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அனுபவம் இருப்பதால், அவரால் ஒருநாள் போட்டியிலும் ஜொலிக்க முடியும். ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் என நம்புகிறேன்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x