Published : 08 Feb 2019 05:05 PM
Last Updated : 08 Feb 2019 05:05 PM

‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணம்?  நியூஸி. வீரர் டேரில் மிட்செலுக்கு மோசமான தீர்ப்பு... : ஹர்ஷா போக்ளே, ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் கடும் விமர்சனம்

நியூஸிலாந்து தொடர் தொடங்கி இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டனவே, ஒன்றுமே நடக்கவில்லையே என்று சர்ச்சைகளுக்காக ஏங்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று வாயை மெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்த சம்பவம் ஆக்லாந்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இன்று நடந்தது, இது சர்ச்சைதான். அதுவும் ஆகாஷ் சோப்ரா, ஹர்ஷா போக்ளே போன்றவர்களும் இது பற்றி ட்வீட் போடும் அளவுக்கு மோசமான தீர்ப்பாக அது அமைந்ததே காரணம்.

 

நியூஸிலாந்து அணியின் டேரில் மிட்செல், குருணால் பாண்டியாவின் பந்தில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் உடனடியாகவே வில்லியம்சனிடம் ஆலோசித்து மிட்செல் டி.ஆர்.எஸ். ரிவியூ கேட்டார். அதாவது பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது என்ற அடிப்படையில் அது எல்.பி.அல்ல, நாட் அவுட் என்று கோரியிருந்தார்.

 

ஸ்னிக்கோ மீட்டரில் பந்து மட்டையைக் கடக்கும் போது ஒன்றும் காட்டவில்லை. ஆனால் ஹாட்ஸ்பாட்டில் மட்டையின் உள்விளிம்பில் பட்டதற்கான மிகபெரிய வெள்ளை ப் புள்ளி தெரிந்தது. 3வது நடுவர் ஸ்னிக்கோ மீட்டரை கணக்கில் எடுத்து கொண்டு, ஹாட்ஸ்பாட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவறு செய்து பால் ட்ராக்கிங் செய்து களநடுவர் தீர்ப்பை உறுதி செய்தார். 3வது நடுவர் ஷான் ஹெய்க் இந்தத் தவற்றைச் செய்தார்.

 

இது மிட்செலுக்கும், களத்தில் இருந்த நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிட்செல் ரோஹித் சர்மாவிடம் கேட்கலாமா என்று கூட யோசித்தார், ஆனால் அதற்குள் ரோஹித் சர்மா நடுவரிடம் பேசினார், கேன் வில்லியம்சன் நடுவரை அணுகியதைப் பார்த்த தோனி நடுவர், வில்லியம்சன் ஆகியோரிடம் பேசினார். கடைசியில் மிட்செல், நடுவர் தீர்ப்பிற்கு மதிப்பளித்து வெளியேற வேண்டியதாயிற்று.

 

இந்நிலையில் கிரிக்கெட் பண்டிதர்கள் மத்தியில் இது அவ்வளவு நல்ல அறிகுறியாகவில்லை.

 

ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “இன்னும் மோசம், இந்த மோசமான தீர்ப்பை அடுத்து நியூஸி அணி ரிவியூவையும் இழந்தது. படுமோசம், நாம் சீரியசாகத்தான் இருக்கிறோமா? டி.ஆர்.எஸ். ஐ-யே தோல்வியடையச் செய்து விட்டார் 3வது நடுவர்.

 

ஹர்ஷா போக்ளே தன் ட்விட்டரில், “டி.ஆர்.எஸ். விஷயம் 3வது நடுவரால் குழப்பப்பட்ட பிறகே பேட்ஸ்மெனை மைதானத்திலிருந்து போகுமாறு கேட்டுக் கொள்வதைத்  தவிர வேறு வழியில்லை. 3வது நடுவர் ஹாட்ஸ்பாட்டை விடுத்து ஸ்னிக்கோ மீட்டருக்கு முன்னுரிமை அளித்தார். இப்படி நாம் கேள்விப்பட்டதில்லை” என்று சாடினார்.

 

டெப் நந்தி என்பவர், “இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நியாயமான போட்டியை விரும்புகின்றனர். நியாயம் வழங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

இந்தத் தீர்ப்பு ஆட்டத்தின் முடிவை மாற்றியதாகவே பலராலும் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x