தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா? உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா?- மஞ்சரேக்கர் பேட்டி

தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா? உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா?- மஞ்சரேக்கர் பேட்டி
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதையடுத்து, அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா, உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெறுவாரா என்பது குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டில் தோனியும், தினேஷ் கார்த்திக்கும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் அணியில் இடம் பெற்றாலும் காலம் தோனிக்கே சாதகமாக இருந்தது. தோனியின் திறமை, அதிகமாகக் கிடைத்த வாய்ப்புகள் போன்றவை அவரை அணியில் தக்கவைத்துக்கொள்ள உதவின. அதேசமயம் தினேஷ் கார்த்திக்கின் துரதிர்ஷ்டம் அணியில் அவர் வாய்ப்பு பெற்றபோதும், தொடக்கத்தில் சரியாக தனது திறமையை நிரூபிக்க முடியாத காரணத்தால், அணியில் மாற்று விக்கெட் கீப்பர் என்ற பெயரோடுதான் இன்று வரை வலம் வருகிறார்

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாகவே பயன்படுத்தி வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 2017-ம் ஆண்டுசாம்பியன்ஸ் டிராபியிலிருந்து தினேஷ் கார்த்திக் 20 போட்டியில் விளையாடி 425 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 47 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 8 முறை நாட் அவுட் கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக தினேஷ் கார்த்திக் இருந்தார்.

அணியில் தினேஷ் கார்த்திக் 4-வது வரிசையில்தான் களமிறங்குகிறார். இந்த வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு பெரும்பாலும் 45 ஓவர்களுக்குப் பின்புதான் வாய்ப்பு கிடைக்கிறது. நெருக்கடியான நேரத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக் பல நேரங்களில் தனது திறமையை நிரூபித்தபோதிலும் அவருக்குத் தொடர்ந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 'கிரிக்இன்போ' தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

''தினேஷ் கார்த்திக்கை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் டி20 வீரராக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிட்டது என்பது புரிந்துவிட்டது. அவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பதும், வாய்ப்புக்கான கதவுகள் திறப்பதும் என்னைப் பொறுத்தவரை இல்லை. அதற்காக அவரின் ரசிகர்களிடம் வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.

பல போட்டிகளில், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் தினேஷ் கார்த்திக் சிறப்பாகச் செயல்பட்டும் அவரை ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யவில்லை எனும்போது, அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். டி20 வீரராக மட்டுமே அவர் தொடர முடியும் என்று பிசிசிஐ விரும்பலாம்.

மற்ற வீரர்களோடு ஒப்பிடும் போது கார்த்திக் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினார். நியூசிலாந்தில் அம்பதி ராயுடு பொறுமையாக, நிதானமாக ஆடிய விதம் கார்த்திக்கைவிடச் சிறப்பாக இருந்தது என்று நிர்வாகம் கருதலாம்.

நியூசிலாந்தில் இந்திய அணி மோசமான நிலையில் இருந்தபோது அணியை மீட்டெடுத்து, மிகப்பெரிய ஸ்கோர் செய்ய ராயுடுவின் பேட்டிங், 50 ஓவர் ஒருநாள் போட்டிக்குத் தகுதியாக இருக்கும் என நிர்வாகம் நம்புகிறது. ஆனால், தினேஷ் கார்த்திக்கின் நிலை என்பது அணியில் ஃபினிஷர் போன்றுதான் இருக்கிறது.

ஆனால், ரன் சேர்ப்பு (நம்பர்) என்று பார்க்கும்போது தினேஷ் கார்த்திக் வசம் குறைவுதான். 50 ஓவர்கள் போன்ற நீண்டநேரம் விளையாடும் போட்டியில் தினேஷ் கார்த்திக்கு நிலைத்து ஆடும் பொறுமையில்லை எனக் கருதுகிறார்கள்.

ஆனால், தோனி, ரிஷப் பந்த் ஆகியோரோடு ஒப்பிடுகையில், தோனியைக் காட்டிலும் கீப்பிங்கில் சற்று குறைவாகவும், ரிஷப் பந்தைக்காட்டிலும் சற்று சிறப்பாகவும் செயல்படுகிறார். ஆனால், ரிஷப் பந்த் சமீபகாலமாக பேட்டிங் செய்யும் விதம் தேர்வாளர்களைக் கவர்ந்துள்ளது, நம்பிக்கை அளித்துள்ளது. நான் ரிஷப் பந்த் ஆதரவாளர் இல்லை. ஆனால், அவர் ஒருநாள் போட்டியில் தனக்கான இடத்தைத் தக்கவைக்க முயன்று வருகிறார்''.

இவ்வாறு மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in