Published : 02 Feb 2019 01:01 PM
Last Updated : 02 Feb 2019 01:01 PM

பயிற்சி ஆட்டங்கள்: உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இரு சவாலான அணிகளுடன் போட்டி

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது.

ஒருநாள் போட்டித்தொடருக்கான 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணியும், தகுதிச்சுற்றில் இரு அணிகளும் இடம் பெறுகின்றன.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் பங்கேற்கும் பயிற்சிப்போட்டிகள் குறித்த விவரத்தை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பிரதானப் போட்டிகளுக்கு முன்பாக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

மே 25-ம் தேதி தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

மே 28-ம் தேதி கார்டிப் சோஃபியா கார்டன் மைதானத்தில் நடக்கும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது இந்திய அணி.

இது தவிர 24-ம் தேதி பிரிஸ்டன் கவுண்டி மைதானத்தில் நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதேநாளில் கார்டிப் வேல்ஸ் அரங்கில் நடக்கும் போட்டியில் இலங்கை தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

25-ம் தேதி ஹேம்ப்ஸ்பயர் பவுலில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

26-ம் தேதி பிரிஸ்டல் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கும் மே.இ.தீவுகள் அணிக்கும், கார்டிப் மைதானத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தானும், வங்கதேசமும் மோதுகின்றன.

27-ம் தேதி ஹேமிஸ்பயர் மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இலங்கை அணி. தி ஓவல் மைதானத்தில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி.

பிரிஸ்டன் மைதானத்தில் 28-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், மே.இ.தீவுகள் அணியும் களம் காண்கின்றன.

இது குறித்து உலகக் கோப்பை மேலாளர் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறுகையில், " உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது இந்தப் பயிற்சிப் போட்டிகள்தான். அதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். உலகில் சிறந்த வீரர்களை ரசிகர்கள் மீண்டும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x