Last Updated : 24 Feb, 2019 12:32 PM

 

Published : 24 Feb 2019 12:32 PM
Last Updated : 24 Feb 2019 12:32 PM

டி20 போட்டியில் புதிய வரலாறு: பல சாதனைகளை உடைத்த ஆப்கானிஸ்தான்: 16 சிக்ஸர்களுடன் 162 ரன்கள் அடித்த வீரர்

டேராடூனில் நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஏராளமான சாதனைகளுடன் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்று தொடரைக்கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 16 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் என 62 பந்துகளில் 162 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வரலாற்று சாதனை படைத்தார். ஆட்டநாயகன் விருது ஹஸ்ரத்துல்லாவுக்கு வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் ராஜீவ்காந்தி மைதானத்தில் டி20 போட்டித் தொடரில் பங்கேற்று வருகின்றன.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், உஸ்மான் கானி ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும் சேர்ந்து அயர்லாந்து பந்துவீச்சை பொளந்து கட்டினார்கள். பவர்ப்ளேயில் முதல் 6 ஓவர்களில் 64 ரன்களும், 8.6 ஓவர்களில் 100 ரன்களும் சேர்த்தனர்.

அயர்லாந்து  பந்துவீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் இருவரும் பறக்கவிட்டனர். ஆப்கானிஸ்தான்  அணி கத்துக்குட்டியாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கினார்கள்.

காட்டடி அடித்த ஹஸ்ரத்துல்லா 25 பந்துகளில் அரைசதத்தையும், 42 பந்துகளில் சதமும் அடித்தார். இவருக்கு துணையாக ஆடிய உஸ்மான் கானி, 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

15.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எட்டியது. கெவின் ஓபிரையன் வீசிய 17-வது ஓவரில் ஹஸ்ரத்துல்லா தொடர்ந்து 4 சிக்ஸர்கள் உள்பட 28 ரன்கள் சேர்த்தார்.

அதிரடியாக பேட் செய்த உஸ்மான் கானி 73(48பந்துகள் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்)ரன்களில் ஆட்டமிழந்தார். முதல்விக்கெட்டுக்கு இருவரும் 236 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ஷபிபுல்லா 7 ரன்னிலும், முகமது நபி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், காட்டடியில் குறைவில்லாமல் வெளிக்காட்டிய ஹஸ்ரத்துல்லா 58 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 42 பந்துகளில் சதம் அடித்த ஹஸ்ரத்துல்லா அடுத்த 16 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. ஹஸ்ரத்துல்லா 62 பந்துகளில் 162 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 16 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

டி20 போட்டியில் இதுவரை கடந்த 2016ம் ஆண்டு கண்டியில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது அதை முறியடித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

ஹஸ்ரத்துல்லா 42 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

மேலும், முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தது என்பது சர்வதேச டி20 போட்டியில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்சமாகும்.

மேலும், இதற்கு முன் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 14 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஹஸ்ரத்துல்லா 16 சிக்ஸர்கள் அடித்து முறியடித்துள்ளார். மேலும், ஹஸ்ரத்துல்லாவின் 162 ரன்கள் என்பது டி20 போட்டியில் பேட்ஸ்மேன் ஒருவரின் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.

279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 91 ரன்கள் சேர்த்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x