

முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரும் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான ஷோயப் அக்தர் தான் மீண்டும் கிரிக்கெட் ஆட வரப்போவதாக அறிவித்துள்ளார்.
இவரது அறிவிப்பைக் கண்டு வாசிம் அக்ரம், ஷோயப் மாலிக் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் ரஜினி பட வசனம் போல், ‘வருவேன், ஆனா எப்போ, எங்கேன்னு சொல்ல முடியாது’ என்று கூறுவது போல் எப்படி மீண்டும் கிரிக்கெட்டுக்கு வரப்போகிறார் என்பதை தெரிவிக்காமலேயே அவர் தன் சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
“இன்றைய குழந்தைகள் தங்களுக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியும் என்று நம்புகின்றனர். அவர்கள் என் பவுலிங் வேகத்துக்கும் கூட சவால் அளிக்கலாம். ஆகவே குழந்தைகளே நான் மீண்டும் வருகிறேன். அப்போது உங்களுக்கு வேகம் என்றால் என்ன என்று காட்டுகிறேன்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மெசேஜ் வெளியிட்டுள்ளார் ஷோயப் அக்தர்.
மேலும் அந்த வீடியோவில், “ஹலோ, பிப்ரவரி 14ம் தேதி குறித்து வைத்து கொள்ளுங்கள் நான் மீண்டும் வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்குகிறது, இதனையடுத்து 6 பிஎஸ்எல் அணிகளில் எந்த அணியில் ஷோயப் அக்தர் ஆடுகிறார் என்று ரசிகர்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு வருகின்றனர்.
வாசிம் அக்ரமும், ஷோயப் மாலிக்கும் அக்தரின் மீள்வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.