

டர்பன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சற்றும் எதிர்பாரா விதமாக தனது திகைப்பூட்டும் பேட்டிங்கினால் 153 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 304 ரன்கள் வெற்றி இலக்கை அபாரமாக விரட்டி நூலிழையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெறச் செய்தார் குசல் பெரேரா.
இதனையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் எங்கிருந்தோ 58 இடங்கள் முன்னேறி தனது வாழ்நளின் சிறந்த தரவரிசை நிலையான 40வது இடத்துக்கு வந்துள்ளார்.
டர்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 51 ரன்கள் எடுத்த குசல் பெரேரா, 2வது இன்னிங்சில் 52/3 என்ற நிலையில் களமிறங்கினார். தனஞ்ஜயாவுடன் 96 ரன்கள் மற்றும் விஸ்வா பர்னாண்டோவுடன் கடைசி விக்கெட்டுக்காக 78 ரன்கள் என்ற முக்கியமான இரு கூட்டணிகள் அமைத்து 304 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக விரட்டி புகழ்பெற்ற ஒரு வெற்றியை இலங்கை அணிக்குப் பெற்றுத்தந்தார்.
அதேபோல் கிளென் மெக்ராவுக்குப் பிறகு பாட் கமின்ஸ் ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது பிப்ரவரி 2006க்குப் பிறகு ஆஸ்திரேலிய பவுலர் ஒருவர் டாப் நிலைக்கு வருவது கமின்ஸ்தான்.
தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ் 10வது இடத்தை இலங்கை வீரர் திமுத் கருணரத்னேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஆலிவியர் 22ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.