தோனி, தினேஷ் கார்த்திக்  விட்ட கேட்ச்கள்; விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட் காட்டடி தர்பாரில் 219 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து

தோனி, தினேஷ் கார்த்திக்  விட்ட கேட்ச்கள்; விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட் காட்டடி தர்பாரில் 219 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து
Updated on
2 min read

வெலிங்டனில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து ரோஹித் சர்மா தவறிழைத்தார், அதன் பலனாக நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக். இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான டிம் லூயிஸ் செய்ஃபர்ட் 30 பந்துகளில் அரைசதம் கண்டவர் அடுத்த 13 பந்துகளில் 34 ரன்களை புரட்டி எடுத்து 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இது இவர் விளையாடும் 9வது டி20 ஆட்டமாகும், இதுவரை இவரது ஸ்ட்ரைக் விகிதம் 131 என்பதும் கவனிக்கத்தக்கது.

கொலின் மன்ரோ 20 பந்துகளில் 34 ரன்களையும் கேன் வில்லியம்சன் 22 பந்துகளில் 34 ரன்களையும் எடுக்க ராஸ் டெய்லர் 13 பந்துகளில் 20 ரன்களையும் குக்கெலிஜின் 7 பந்துகளில் 20 ரன்களையும் எடுத்து பங்களிப்புச் செய்தனர்.

தொடக்க வீரர்களான மன்ரோ, செய்ஃபர்ட் கூட்டணி முதல் 50 பந்துகளில் ஓவர்களிலேயே 86 ரன்களைக் குவிக்க செய்ஃபர்ட் காட்டடியில் 12.4 ஓவர்களிலேயே 134 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து. இந்திய அணியில் சிறந்த சிக்கன விகிதம் எடுத்த சாஹலின் சிக்கன விகிதமே ஓவருக்கு 8.75 ரன்கள். கலீல் அகமெட் 4 ஒவர்களில் 48 ரன்களையும் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 47 ரன்களையும் வாரி வழங்கினர். குருணால் பாண்டியா 4 ஓவர்களில் 37 ரன்கள், ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 51 ரன்கள் விளாசித்தள்ளப்பட்டார்.

இந்திய பவுலர்கள் லைன் மற்றும் லெந்த் கிடைக்காமல் திணறினர். முதல் ஒவரில் குமார் 4 ரன்களையே கொடுத்தார். ஆனால் 2 வது ஓவரில் கலீல் அகமெடை மன்ரோ 2 பவுண்டரிகள் விளாசினார். 3வது ஓவரில் புவனேஷ்வரை செய்ஃபர்ட் ஸ்லோ பந்தை சீ போ என்று ஒரு மிட்விக்கெட் சிக்ஸ் அடித்தார், இந்த ஓவரில் 15 ரன்கள் வந்தன. அடுத்த ஓவரில் கலீல் அகமெட் தவறிழைக்க ஷார்ட் பிட்ச் பந்தை லெக் திசையில் ஒரு சிக்சரையும் இன்னொரு ஷார்ட் பிட்ச் பந்தை பாயிண்ட் மேல் இன்னொரு சிக்சரையும் விளாசினார் மன்ரோ. இந்த ஓவரில் 16 ரன்கள்.

தோனி, தினேஷ் கார்த்திக் விட்ட கேட்ச்:

டிம் செய்ஃபர்ட் 17 ரன்களில் இருந்த போது குருணால் பாண்டியா பந்தில் செய்ஃபர்ட்டுக்கு திக் எட்ஜ் எடுத்தது, பொதுவாக தோனி இந்த கேட்ச்களை எடுத்து விடுவார், ஆனால் இம்முறை சற்றே தாமதமாக அவர் வினையாற்ற கேட்சை நழுவ விட்டார். அடுத்த பந்தே சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டில் ஒரு சிக்ஸ் விளாசினார் செயஃபர்ட். ஹர்திக் 2 பவுண்டரிகளைக் கொடுக்க 6 ஓவர்களில் 66 ரன்கள் வந்தது. 34 ரன்கள் எடுத்த மன்ரோ குருணால் பாண்டியாவிடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சாஹல் முதல் ஒவரிலேயெ 9 ரன்களைக் கொடுத்தார். பிறகு குருணால் பாண்டியாவை 2 சிக்சர்கள் விளாசினார் செய்ஃபர்ட். அதே ஓவரில் செய்ஃபர்ட் ஸ்லாக் ஸ்வீப் ஒன்று டாப் எட்ஜ் எடுக்க லாங் ஆனில் ஓடி வந்து கேட்சை விட்டார் தினேஷ் கார்த்திக், அப்போது செய்ஃபர்ட் 71 ரன்களில் இருந்தார். மீண்டும் கேட்சை விட்டதால் அடுத்த சாஹல் ஓவரில் ஒரு பவுண்டரி மீண்டும் ஒரு சிக்ஸ் விளாசினார் செய்ஃபர்ட்.  கடைசியில் 84 ரன்களில் செய்ஃபர் கலீல் அகமெடின் யார்க்கர் போல் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஆனால் முன்னதாக தினேஷ் கார்த்திக், மிட்செலுக்கு பவுண்டரி அருகே அருமையான கேட்சைப் பிடித்தார் தினேஷ் கார்த்திக், கயிறைத் தாண்டி விடுவோம் என்று தெரிந்து பந்தை உள்ளுக்குள் தள்ளிவிட்டு பிறகு வெளியே வந்து டைவ் அடித்து கேட்சை எடுத்தார்.

தோனி விட்ட கேட்சின் போது 17-ல் இருந்தார் செய்ஃபர்ட் பிடித்திருந்தால் நியூசிலாந்து இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்திருக்க முடியாது, அதே போல் தினேஷ் கார்த்திக் கேட்ச் விட்ட பிறகு மேலும் 13 ரன்களை அடித்தார் செய்ஃபர்ட், டி20 போட்டிகளில் கூடுதலாக 4-5 ரன்களே போட்டியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது. எனவே இந்த 2 கேட்ச்களினால் செய்ஃபர் வெளுத்துக் கட்டியதில் நியூசிலாந்து இந்திய அணிக்கு 220 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

விஜய் சங்கருக்கு ஏன் பவுலிங் தரவில்லை என்பது புரியாத புதிர்.  இந்திய அணி தற்போது ரோஹித் சர்மா (1) விக்கெட்டை இழந்து 5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in