Published : 13 Feb 2019 04:07 PM
Last Updated : 13 Feb 2019 04:07 PM

3ம் நடுவரிடம் முறையீடு செய்ய 15 விநாடி முடிந்து விட்டதா? அல்லது 13 விநாடிதான் ஆனதா? அலீம் தார் சர்ச்சையுடன் தொடங்கிய இலங்கை-தெ.ஆ. டெஸ்ட்

டர்பன் மைதானத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே  சர்ச்சை தொடங்கியது. பிறகு ஆம்லா அவுட்டிலும் சர்ச்சை தொடர்ந்தது.

 

தன்னுடைய முதல் ஓவரை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ வீச 4வது பந்தில் டீன் எல்கர் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

இது நடந்து முடிந்தவுடன் அதே ஓவரில் ஆம்லாவின் கால்காப்பை பந்து தாக்க, விஸ்வா பெர்னாண்டோ உட்பட ஒட்டுமொத்த இலங்கை அணியும் பலத்த முறையீடு எழுப்பியது.

 

 

களநடுவர் அலீம் தார் அதனை நாட் அவுட் என்று முடிவெடுத்தார். இலங்கை கேப்டன் கருணரத்னே, பெர்னாண்டோ ஆகியோர் ஆலோசித்து டி.ஆர்.எஸ் முடிவைக் கோரினர். ஆனால் அலீம் தார் அந்த கோரிக்கையை நிராகரித்தார், காரணம் டி.ஆர்.எஸ். கேட்பதற்கான கால அவகாசம் 15 விநாடிகளைக் கடந்து கருண ரத்னே முறையீடு கோரியதாக நிராகரிக்கப்பட்டது.

 

அதாவது களநடுவர் டி.ஆர்.எஸ் கோரிக்கை 15 விநாடிகளுக்குள் வைக்கப்படவில்லை என்று உணர்ந்தால் ரிவியூவை மறுத்து விட முடியும். ஆனால் வர்ணனையாளர்கள் 13 விநாடிகள்தான் முடிந்திருந்தது, கருண ரத்னே டி.ஆர்.எஸ். கோரிக்கை அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறினர்.

 

மேலும் 10 விநாடிகள் முடிந்த பிறகே பவுலிங் முனையில் இருக்கும் நடுவர் ரிவியூ ஆலோசிக்கும் அணிக்கு எச்சரிக்க வேண்டும், இன்னும் 5 விநாடிகளே உள்ளன என்று அறிவுறுத்த வேண்டும் என்பதும் விதிமுறையில் உள்ளது.

 

ஆனால் அலீம் தார் அப்படி அறிவுறுத்தியதாகவும் தெரியவில்லை. அந்த ரிவியூவை அனுமதித்திருந்தால் ஆம்லா நிச்சயம் பெவிலியன் திரும்பியிருப்பார் தென் ஆப்பிரிக்கா 0/2 என்று ஆகியிருக்கும், காரணம் அது மிகச்சரியான ஒரு எல்.பி.ஆகும்.

 

அலீம் தார் ஏன் 15 விநாடிகள் முடிந்து விட்டது என்று ரிவியூவை மறுத்தார்? 13 விநாடிகள்தானே ஆனது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் போர்க்கொடி தூக்கினாலும் தூக்க வாய்ப்புள்ளது. இப்படியாக சர்ச்சையுடன் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா, இலங்கை டெஸ்ட் போட்டி.

 

உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் என்று திணறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x