

4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. இந்த ஆட்டத்தின் சுவையான புள்ளி விவரங்கள் சில.
4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சை ரஹானேயும், ஷிகர் தவனும் வறுத்து எடுக்க இந்தியா 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
அந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்:
அஜிங்கிய ரஹானே 100 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தது அவரது முதல் ஒருநாள் போட்டி சதமாகும், இதற்கு முன்பாக மொகாலியில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு 104 பந்துகளில் 91 ரன்களை எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தொடக்க வீரராக ரஹானே 6 இன்னிங்ஸ்களில் 300 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 50 ரன்கள்.
ஆனால் 2ஆம் நிலையில் களமிறங்கும்போது அவரது சராசரி 23.62. அதாவது 16 இன்னிங்ஸ்களில் 378 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்துள்ளது. ரஹானே இதுவரை ஒருநாள் போட்டிகளில் 3 ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 2வது விருதை நேற்று பெற்றார்.
2013, ஜூன் முதல் தற்போது வரை இங்கிலாந்தில் இந்தியா 8 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இது ஒரு அணி நிகழ்த்தும் சாதனையாகும்.
ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி 50வது வெற்றியாகும். மொத்தம் 90 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 35 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது இந்திய அணி. 2 போட்டிகள் டை. முடிவு வராதது 3 போட்டிகள். மேலும் 117 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
மேலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இருமுறைதான் தோற்றுள்ளது, இருமுறையும் இந்தியாதான் இங்கிலாந்தை வறுத்தெடுத்த அணியாகும்.
கேப்டன் தோனி 91 ஒரு நாள் போட்டிகளில் வென்று சிறந்த கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
மொகமது ஷமி 12 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 2014-இல் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய பவுலர் ஆவார்.
7 முறையாக இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் வென்ற அணி ஒருநாள் போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் சதம் கண்ட 34வது இந்திய வீரரானார் அஜிங்கிய ரஹானே. மொத்தமாக இந்திய வீரர்கள் 217 ஒருநாள் சதங்கள் அடித்துள்ளனர். ஆஸ்திரேலியா 179 சதங்களை அடித்துள்ளது.