

ஐபிஎல் கிரிக்கெட்டை அகற்ற வேண்டும், கிரிக்கெட்டின் நீண்ட கால ஆயுளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாதகம் விளைவித்து வருகிறது என்று இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் சாடியுள்ளார்.
லார்ட்ஸில் எம்.சி.சி. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் கவுட்ரி சொற்பொழிவில் இயன் போத்தம் இவ்வாறு கூறியுள்ளார்.
"நான் ஐபிஎல் கிரிக்கெட் பற்றி மிகுந்த கவலையடைகிறேன், உண்மையில், அந்த கிரிக்கெட் வடிவம் இருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன், உலக கிரிக்கெட்டின் முன்னுரிமைகளை அது மாற்றிவிடுகிறது. வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு அடிமைகளாக இருக்கின்றனர். நிர்வாகிகள் அதற்குத் தலைவணங்குகின்றனர்.
2 மாத காலங்களுக்கு உலகின் சிறந்த வீரர்களை தன்னகத்தே பிடித்துப் போட்டுக் கொண்டு அவர்களை உருவாக்கிய கிரிக்கெட் வாரியங்களுக்கு ஒரு பைசா கூட பயனில்லாமல் போவதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.
ஐபிஎல் கிர்க்கெட்டின் சக்தி உலக கிரிக்கெட்டின் நீண்ட நாள் ஆயுளுக்கு உகந்ததல்ல. மேலும் கிரிக்கெட்டில் சூதாட்டம், ஊழல் தன்னிலே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது, ஐபிஎல் கிரிக்கெட் அந்த வாய்ப்பை அதிகப் படுத்துவதோடு சூதாட்டத்திற்கும் மேட்ச் ஃபிக்சிங்கிற்கும் வழிவகுக்கிறது.
சில வீரர்கள் இதில் அம்பலமாகியுள்ளனர். ஆனால் இரண்டாம் தர வீரர் ஒருவரை சிறையில் தள்ளுவதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விடுமா? பாம்பைக் கொல்ல அதன் தலையை வெட்டி எறிய வேண்டும்.
ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவினர் பிரச்சினையின் வேரைக் கண்டுபிடித்து தேவைப்பட்டால் முக்கியஸ்தர்களையும் அம்பலப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.