Published : 19 Jan 2019 05:48 PM
Last Updated : 19 Jan 2019 05:48 PM

சாதனை விரட்டல்: முடித்துக் கொடுத்த புஜாரா;  ரஞ்சி கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சவுராஷ்ட்ரா அரையிறுதியில்

லக்னோவில் உத்தரப் பிரதேச அணிக்கும், சவுராஷ்ட்ரா அணிக்கும் இடையில் நடைபெற்ற ரஞ்சி டிராபி 2வது காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்ட்ரா அணி 372 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

 

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் பெரிய ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிய அணி என்பதில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது சவுராஷ்டிரா.

 

இத்தனைக்கும், முதல் இன்னிங்சில் உ.பி. 385 ரன்களை எடுக்க சவுராஷ்டிரா 208ரன்களுக்கு சுருண்டது, புஜாராவும் 11 ரன்களில் ஏமாற்றமளித்தார், தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய வலுவான முன்னிலை பெற்றிருந்தும் 194 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து சவுராஷ்டிரா வெற்றி பெற 372 ரன்கள் இலக்கு நிர்ணயமானது, இதனை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார சாதனை வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது சவுராஷ்டிரா.

 

ஆனால் அரையிறுதியில் சவுராஷ்டிரா அணி கடினமான கர்நாடகாவை எதிர்கொள்கிறது. சவுராஷ்ட்ராவின் ஹர்விக் தேசாய் மிகப்பிரமாதமாக ஆடி தன் முதல் சதத்தை எடுத்து 116 ரன்கள் எடுக்க,  இவரும் எஸ்.எஸ்.படேலும் முதல் விக்கெட்டுக்காக 132 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

 

கடைசியில் செடேஷ்வர் புஜாரா 110 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும், அவருடன் ஜாக்சன் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 109 பந்துகளில் 73 ரன்களையும் சேர்க்க  372/4 என்று 116வது ஓவரில் வெற்றியை ஈட்டியது, இதற்கு முன்பாக 2008-09-ல் 371 ரன்கள் என்ற இலக்கை விரட்டி அசாம் அணி வென்றதே ரஞ்சி சாதனையாக இருந்தது, தற்போது சவுராஷ்டிராவிடம் அந்தச் சாதனை உள்ளது.

 

முதல் இன்னிங்ஸில் தடுமாறிய புஜாரா (11) இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடினார், பிளிக் ஷாட்களை அதிகம் பயன்படுத்தினார், ஆஃப் திசையில் கல்லி திசையைத் தாண்டி ஸ்டியர் ஷாட்களையும் அதிகம் பயன்படுத்தி வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x