

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், ஜனவரி 15-ம் தேதிக்கும் ஒரு ஒற்றுமை கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வருகிறது.
அடிலெய்டில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 299 ரன்கள் இலக்கை 4 பந்துகள் மீதிமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எட்டியது.
ஆர்ப்பரிப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி ஒருநாள் அரங்கில் தனது 39-வது சத்தை நிறைவு செய்தார். அவருக்குத் துணையாக ஆடிய தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல், 55 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. விராட் கோலி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜனவரி 15-ம் தேதி சதம் அடித்து வருகிறார்.
2. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராகக் கோலி சதம் (122)அடித்தார்.
3. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகக் கோலி(153) சதம் அடித்தார்.
4. 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கோலி 104 ரன்கள் அடித்துள்ளார்.
5. 2019-ம் ஆண்டில் தனது முதல் சதத்தை விராட் கோலி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் அடித்தார்.
6. ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி அடிக்கும் 9-வது சதம் இதுவாகும். இதன் மூலம் இங்கிலாந்து வீரர் சர் ஜேக் ஹாப்ஸ் சாதனையான 9 சதங்களைச் சமன் செய்துள்ளார் கோலி.
7. ஒருநாள் அரங்கில் விராட் கோலி அடிக்கும் 39-வது சதமும், ஒட்டுமொத்தமாக சர்வதேசப் போட்டியில் அடிக்கும் 64-வது சதமாக இது அமைந்தது.
8. சர்வதேச அளவில் அதிகமான சதம் அடித்தவர்கள் பட்டியலில், கோலி 64 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் (100), 2-வது இடத்தில் ரிக்கி பாண்டிங் (71) உள்ளனர்.
9. வெளிநாடுகளில் சென்று அதிகமான சதம் அடித்த வீரர்களில் விராட் கோலி 2-ம் இடத்தைப் பெற்றுள்ளார். 29 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும், கோலி 22 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளார். ஜெயசூர்யா, சங்கக்கராவின் சாதனையைக் கோலி முறியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. ஒருநாள் அரங்கில் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 11-வது இடத்தில் உள்ளார். தற்போது 218 போட்டிகளில் 39 சதம், 48 அரை சதம் ஆகியவற்றுடன் 10,339 ரன்களுடன் கோலி உள்ளார்.
11. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் விராட் கோலி 5-வது முறையாகச் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் 116 (2012 டெஸ்ட்), 115 (2014 டெஸ்ட்), 141 (2014 டெஸ்ட்), 107 (2015 ஒருநாள் போட்டி), 104 (2019 ஒருநாள் போட்டி)
12. விராட் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்றபின் ஒருநாள் போட்டியில் போட்டியை நடத்தும் நாட்டுக்கு எதிராகச் சதம் அடிக்கும் நாடுகளில் 6-வது ஆஸ்திரேலியா. இதற்கு முன் ஜிம்பாப்வே, மே.இ.தீவுகள், வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சென்று அந்நாட்டுக்கு எதிராகவே கோலி சதம் அடித்துள்ளார். இதுவரை ஒரு அணியின் கேப்டன் 4 நாடுகளில் மட்டுமே சென்று சதம் அடித்திருந்த சாதனையை கோலி உடைத்தார்
13. கேப்டனாக இருந்து 7 நாடுகளின் அணிக்கு எதிராகக் கோலி சதம் அடித்துள்ளார். இதற்கு முன் ஜெயசூர்யா, டிவில்லியர்ஸ் அந்தச் சாதனையை செய்துள்ளனர்.
14. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் கோலி அடிக்கும் 3-வது சதம் இதுவாகும்.
15. கேப்டனாகப் பொறுப்பேற்ற பின் ஒருநாள் போட்டிகளில் வெளிநாடுகளில் சென்று விராட் கோலி அடித்த 10-வது சதமும், 2-வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். ரிக்கி பாண்டிங் 12 சதங்களுடன் முதலிடத்திலும், கங்குலி 9 சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
16. விராட் கோலி கேப்டனாகப் பொறுப்பேற்ற பின் சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் 20 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித் ஆகியோரும் இதே சாதனையைச் செய்துள்ளனர்.