Published : 29 Jan 2019 10:50 AM
Last Updated : 29 Jan 2019 10:50 AM

2020 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: சவாலான அணிகளுடன் கோலி படை மோதுகிறது

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.

ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடப்பது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும்.

ஆடவர் பிரிவு டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அக்டோபர் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை லீக் சுற்றுப்போட்டிகள் நடக்கின்றன.

நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை 45 போட்டிகள் நடக்கின்றன, 16 அணிகள் பங்கேற்கின்றன. 7 நகரங்களில், 7 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

ஆடவர் இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குரூப்-2வில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணியோடு, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் 2அணிகள் இடம் பெறுகின்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் களமாடுகிறது இந்திய அணி.

குரூப்-1ல் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் இரு அணிகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் குரூப் ஸ்டேஜ் ஆட்டங்கள் 2020 அக்டோபர் 24-ம் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது. நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபர் 25-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

குருப்-1

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் அணி, பி பிரிவில் 2-ம் அணி

குரூப்-2

இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதல் அணி, ஏ பிரிவில் 2-ம் அணி

— ICC T20 World Cup (@T20WorldCup) January 28, 2019

இந்திய அணி மோதும் லீக் போட்டிகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.    2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பெர்தில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதுகிறது.

2.   29-ம் தேதி தகுதிச்சுற்றில் ஏ பிரில் 2-ம் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இது மெல்போர்னில் நடக்கிறது.

3.    நவம்பர் 1-ம்தேதி மெல்போர்னில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

4.    நவம்பர் 5-ம் தேதி அடிலெய்டில் நடக்கும் ஆட்டத்தில் பி பிரிவில் முதல் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

5.   நவம்பர் 8-ம் தேதி சிட்னியில் நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x