

முதல் தர கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் 20 ஓவர் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் இர்பான் பத்தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த விமர்சனத்தை எதிர்கொண்ட இர்பான் பதான் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"அணியில் யாராவது எனது நம்பகத்தன்மையை சந்தேகித்தால் அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் அதைப் பற்றி பெரிதாகச் சிந்திப்பதில்லை. கடந்த 2 உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடர்களில் நான் பங்கேற்காதது பற்றி சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் உடற்தகுதி நிபுணர் எனது காயத்தைக் கருத்தில் கொண்டு என்னை காத்திருக்கும் படி கூறியும் நான் ஒரு பேட்ஸ்மெனாக ரஞ்சி போட்டிகளில் விளையாடியதை இவர்கள் ஒருபோதும் குறிப்பிடுவதில்லை.
உடற்தகுதி நிபுணர் என்னைக் காத்திருக்குமாறு கூறியதை வைத்துக் கொண்டு நான் விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் பரோடா அணிக்காக எனது கடமைகளை நான் செய்வதை முதன்மையாகக் கருதினேன், நான் சுலபமாக முழு உடல்தகுதி பெற்றவுடன் பவுலிங் ஆல்ரவுண்டராகவே ஆட விரும்புகிறேன் என்று கூறியிருக்கலாம். ஆனால் நான் செய்யவில்லை.
இது தவிர ஒருநாள் கிரிக்கெட், முஷ்டாக் அலி டிராபி ஆகியவற்றிலும் விளையாடினேன். முஷ்டாக் அலி டிராபியில் விளையாடும் போடு டைபாய்ட் காய்ச்சலுடன் ஆடினேன் என்பதை எனது நெருங்கிய சகாக்கள் அறிவர்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எனது நேர்மை மீது எனக்கு ஒரு போதும் சந்தேகம் எழுந்ததில்லை. நாட்டிற்காக மீண்டும் ஆடும் குறிக்கோள்தான் எனது தீவிரம் அடங்கியுள்ளது. அதை உடனடியாக நிறைவேற்றுவேன். மக்கள் என்ன பேசுகிறார்களோ பேசட்டும்.
ஆம், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆடவேண்டும் அது என் மனதில் இருக்கிறது. அதற்கு முன்பாக முழு ரஞ்சி சீசனிலும் முழு உடற்தகுதியுடன் ஆட வேண்டும். நிறைய போட்டிகளை ஆட ஆட முன்னேற்றம் ஏற்படும். உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் இதுவே எனது குறிக்கோள். ஆனால் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பது உறுதி”
என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.