Published : 03 Jan 2019 11:33 AM
Last Updated : 03 Jan 2019 11:33 AM

அதிவேக ரன் குவிப்பு: சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அதிவேகமாக ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹேசல்வுட் பந்துவீச்சில் 23 ரன்களில் வெளியேறினார்.

இருந்தபோதிலும் 2019-ம் ஆண்டில் கோலி மறக்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 19 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்று, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்திருந்த போதிலும், 2019-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கோலி படைக்கும் முதல் சாதனையாகும்.

விராட் கோலி குறித்து சமீபத்தில் சச்சின் பேசுகையில், ''என்னுடைய பல்வேறு சாதனைகளையும் கோலி தகர்ப்பார் அதற்கான திறமை உண்டு'' என்று கூறியிருந்தார். அது நனவாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் தனது ஒட்டுமொத்த டி20, ஒருநாள், டெஸ்ட் என  சர்வதேசப் போட்டிகளில் 19 ஆயிரம் ரன்களை 432 இன்னிங்ஸ்களில் எட்டினார். ஆனால், விராட் கோலி தனது 19 ஆயிரம் ரன்களை சச்சினைக் காட்டிலும் 33 போட்டிகள் குறைவாக 399 இன்னிங்ஸ்களிலேயே  இன்று எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்த போது கோலி தனது சர்வதேசப் போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை எட்டினார். இங்கிலாந்து டெஸ்ட்டில் விளையாடியபோது, தனது 18 ஆயிரம் ரன்களை எட்டினார். ஆஸ்திரேலிய தொடரில் தற்போது விளையாடி வரும்போது 19 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.

இருவரைத் தொடர்ந்து, மே.இ.தீவுகள் வீரர் பிரையன் லாரா (433), ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (444), தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் (458) இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்தனர்.

30 வயதான விராட் கோலி கடந்த 2018-ம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் 2,735 ரன்கள் குவித்து காலண்டர் ஆண்டில் அதிகமாக ரன் குவித்த வீரர் எனும் பெருமையைப் படைத்தார். இதில் 11 சதங்கள் அடங்கும். கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் கோலி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,322 ரன்கள் சேர்த்து, 55 சராசரி வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 14 போட்டிகளில் 1,202 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்கள் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x