

தந்தை இறந்த செய்தி அறிந்த நிலையிலும்கூட தனது சொந்த நாட்டுக்குச் செல்லாமல், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி தந்தைக்கு மரியாதை செலுத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை ஆஸ்திரேலிய மக்கள் கொண்டாடினார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் விளையாடி வருகிறார். அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக ரஷித் கான் விளையாடி வரும் நிலையில், கடந்த 30-ம் தேதி அவரின் தந்தை காலமாகிவிட்டதாக அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தனது தந்தை இறந்தது குறித்து மிகுந்த வேதனையுடன், ரஷித் கான் ட்விட்டரில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த 30-ம் தேதி நடந்த போட்டிக்குப் பின் அவர் தனது தந்தையின் இறுதிச்சடங்குக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மறுநாள் 31-ம்தேதி (நேற்று) வழக்கம்போல் டி20 போட்டியில் விளையாடி தனது தந்தைக்கு மரியாதை செலுத்தினார்.
தந்தை இறந்த செய்தி அறிந்தும் இறுதிச்சடங்குக்குச் செல்லாமல் தான் சார்ந்திருக்கும் அணியின் வெற்றிக்காக விளையாடிய ரஷித் கானை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமி இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்தையும், போட்டியையும் ஒருங்கே ரசித்தனர். ஆனால் ரஷித் கான் களத்தில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
9-வது ஓவரை ரஷித் கான் வீச வந்தபோது, அரங்கத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றனர். அந்த ஓவர் முடியும் வரை ரஷித் கானுக்கு ரசிகர்கள் கைதட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். தனக்குரிய 4 ஓவர்களையும் வீசி 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். தந்தை இறப்பையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடிய ரஷித் கானை சக வீரர்கள் கட்டியணைத்துப் பாராட்டினார்கள்.
இந்தப் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியை 20 ரன்கள்வித்தியாசத்தில் வென்றது ரஷித் கான் சார்ந்திருந்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி.
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே கூறுகையில், “ என்னுடைய சக வீரரையும், சகோதரருமான ரஷித் கானின் செயலைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆஸ்திரேலியாவே ரஷித் கானை வரவேற்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒருவர் ரஷித் கான் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை” எனத் தெரிவித்தார்.