Last Updated : 25 Jan, 2019 02:03 PM

 

Published : 25 Jan 2019 02:03 PM
Last Updated : 25 Jan 2019 02:03 PM

இப்படி பேசாதீங்க; சர்பராஸை மன்னிக்கிறோம் ஏனென்றால்..- தெ.ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் நெகிழ்ச்சி

’நானும், எங்கள் அணியும் நிறவெறியுடன் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமெடை மன்னிக்கிறோம் ஏனென்றால், அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், தென் ஆப்பிரிக்காவில் இப்படி இனிமேல் பேசாதீர்கள்’ என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் உருக்கமாகத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் களத்தில் பேட் செய்துகொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் பெகுல்க்வாயோவை நோக்கி, நிறவெறியுடன் பேசினார்.

அப்போது, “ஏய் கருப்புப் பயலே, உன் அம்மா எங்கே? உனக்காக என்ன பிரார்த்தனைச் செய்ய கூறினாய்” என்று சர்பராஸ் அகமெட் பேசியது ஸ்டம்ப் மைக்கில் கேட்க சர்ச்சை கிளம்பியது, சர்பராஸ் மீது கடும் கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சர்பராஸ் அகமெட் செயலைக் கடுமையாகக் கண்டிக்க சர்பராஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்:

’’ஆட்டத்தின் போக்கில் ஏற்பட்ட வெறுப்பில் பேசிய என் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் நான் அவர்களிடம் நேர்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் வார்த்தைகள் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டு நோக்கியதல்ல.

யாரையும் வருத்தமடையச் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. என் வார்த்தைகள் யாருக்கும் கேட்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கூட கூறப்படவில்லை. அது எதிரணி வீரராக இருக்கலாம், ரசிகர்களாக இருக்கலாம். நான் என் கடந்த காலம் போலவே, எதிர்காலத்திலும் உலகம் முழுதும் ஆடும் சக கிரிக்கெட் வீரர்களைச் சகோதரத்துவ உணர்வுடனேயே பார்ப்பேன். களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவேன்’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நானும், எங்கள் அணியும் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட்டை மன்னிக்கிறோம். ஏனென்றால், அவர் மனம் திறந்து எங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். இனிமேல் எங்கள் கையில் ஏதும் இல்லை. நாங்கள் மன்னித்துவிட்டோம், இனி ஐசிசி அதைப் பார்த்துக்கொள்ளும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் போது, மிகவும் கவனமாகப் பேசுங்கள். தயவு செய்து வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்யும் போது நிறவெறியுடன் இப்படிப் பேசாதீர்கள். ஆனால், சர்பராஸ் எங்கள் நாட்டு வீரரைக் குறிப்பிட்டு பேசவில்லை என்பது தெரியும். ஆனால், தன் வாயில் இருந்து விழுந்த வார்த்தைக்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.

ஆனால், சர்பராஸ் பேசிய வார்த்தைகளை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நிலைமையை உணர்ந்து சர்பராஸ் உடனுக்குடன் மன்னிப்புகோரிவிட்டார். மன்னிப்பு கேட்டதால், நாங்களும் மன்னித்துவிட்டோம். மன்னித்துவிட்டோம் என்பதால், நடவடிக்கைகளை ரகசியமாகச் செய்வோம் என்பதில் அர்த்தமில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையைப் போட்டி நடுவர் ரஞ்சன் மடுகலேவிடம் இருந்து ஐசிசி பெற்று ஆலோசித்து வருகிறது. இந்தச் சம்பவத்தின் இயல்புத்தன்மை கருதி சட்ட வல்லுநர்களும் இதில் ஆலோசித்து வருகின்றனர்.

நாங்கள் மிகவும் கருணையுள்ள அணி என்பதைக் கூறிக்கொள்கிறோம். யாரையும் தவறு செய்தால் எளிதாக மன்னித்துவிடுவோம். ஒருவேளே இது ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால், வேறுமாதிரி நடந்திருக்கலாம்.

இவ்வாறு டூப்பிளசிஸ் தெரிவித்தார்.

இது குறித்து ஆன்டி பெகுல்வேயோ கூறுகையில், “ சர்பராஸ் அகமது பேசிய வார்த்தைகள் என்னை நோக்கியது என்று நான் நினைக்கவில்லை. அதனால், நான் அவர் பேசியபோது திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவேளை நானாக இருந்திருந்தாலும், அவர் என்ன பேசினார் என்பது புரிந்திருக்காது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x