Published : 09 Jan 2019 06:58 PM
Last Updated : 09 Jan 2019 06:58 PM

ராகுல், பாண்டியாவுக்கு பிசிசிஐ கற்றுக் கொடுக்க வேண்டுமா? ஹர்ஷா போக்ளே ட்வீட்டும் ரவிசாஸ்திரியை விளாசும் நெட்டிசன்களும்

காஃப் வித் கரன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாண்டியாவின் நடத்தை தொடர்பாக எழுந்த சர்ச்சையில் பிசிசிஐ ராகுல், பாண்டியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து ஹர்ஷா போக்ளே தன் சமூகவலைத்தளக் கணக்கில் பதிவிட நெட்டிசன்கள் அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

 

பெண்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவின் பேச்சு பொதுவெளியில் மோசமானது என்ற விமர்சனங்கள் எழுந்தன, இதனையடுத்து பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இதற்கு ஹர்ஷா போக்ளே தன் ட்வீட்டில்,

 

“காரணம், விளக்கம் கேட்டு ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியதெல்லாம் சரிதான்.  ஆனால் ஓய்வறை தாண்டிய விஷயங்கள் குறித்து பிசிசிஐ கொஞ்சம் இந்த இளம் வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன். அவர்களை சில விஷயங்களுக்கு உணர்வுபூர்வமாக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

இதற்கு நெட்டிசன்கள் தரப்பில் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

 

பாண்டியாவின் பெற்றோரே ஒன்றும் செய்ய முடியாத போது பிசிசிஐ செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய கோரிக்கைதான். இதனை பிசிசிஐ செய்தால் ரவிசாஸ்திரி அங்கிள் அணியின் மிகப்பெரிய சாதனை இது என்று உரிமை கோரலாம் என்று ஆசிர்வாத் தேவ் என்பவர் ட்வீட்டியுள்ளார்.

 

மேலும், ரவிசாஸ்திரியைத்தான் நெட்டிசன்கள் தாக்கியுள்ளனர், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ரவிசாஸ்திரியே பல மைல்கள் பின்னேயிருக்கிறார், இவர் எங்கு வீரர்களைத் திருத்துவது என்று சிலர் ட்வீட் செய்துள்ளனர்.

 

மேலும் சிலர் சச்சின் திராவிட், லஷ்மண், கங்குலி கால்தூசிக்கு இப்போதைய வீரர்களின் நடத்தைப் பெறாது என்று சாடியுள்ளனர்

 

இன்னும் சிலர் சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மனுக்கு பிசிசிஐ-யா சொல்லிக் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

ரவிசாஸ்திரிக்கு இதெல்லாம் தெரியாது, அனில் கும்ப்ளேதான் இந்த விஷயத்தில் நல்ல பயிற்சியாளர் என்று சிலர் கூறுகின்றனர், மொத்தத்தில் ரவிசாஸ்திரியை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஒரு சிலர், என்ன இதில் உணர்வுபூர்வமாக்குவது, ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் உருவாக்கிய பண்பாட்டிலிருந்து வருபவர், இரவு விருந்து, சியர்லீடர் பெண்கள், கிரிக்கெட்டில் கவர்ச்சியை ஏற்றுவதினால் ஏற்பட்டுள்ள விளைவு இது என்று சாட்டையடி அடிக்கின்றனர்.

 

உங்கள் ஆசிரியர் ரவிசாஸ்திரியாக இருக்கும் போது மாணவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? என்றும் சிலர் பாய்ந்துள்ளனர்

 

முதல்ல பயிற்சியாளரை இதற்கு உணர்வுபூர்வமாக இருக்க பிசிசிஐ கற்றுக் கொடுக்கட்டும் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x