முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை; பாண்டியா, ராகுலுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம்: விராட் கோலி திட்டவட்டம்

முறையற்ற கருத்துகளுக்கு இங்கு இடமில்லை; பாண்டியா, ராகுலுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம்: விராட் கோலி திட்டவட்டம்
Updated on
1 min read

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் பற்றி அவதூறாக, இழிவாகப் பேசிய பாண்டியாவிடமும், கே.எல்.ராகுலுக்கும் விஷயத்தை தெளிவுபடுத்தி விட்டோம், அதாவது முறையற்ற கருத்துகளை ஒரு போதும் இந்திய அணி அங்கீகரிக்காது என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் ஒருநாள் போட்டி  தொடங்கும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விகளுக்கு விராட் கோலி கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் அணி பார்வையிலிருந்து முறையற்ற கருத்துகளை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம், கண்டிப்பாக நாங்கள் அதை ஆதரிக்க மாட்டோம். இரண்டு வீரர்களும் என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். நடந்தது எவ்வளவு பெரிய சர்ச்சையானது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஒருவரைக் கடுமையாகவே தாக்கும், என்ன தவறு நடந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

நிச்சயமாக இந்திய அணியாகிய நாங்கள் அம்மாதிரி கருத்துகளை ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை. இதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி விட்டோம்.  பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கருத்தை என்றும் ஆதரிக்கப்போவதில்லை, அது முற்றிலும் அவர்களது தனிப்பட்ட சொந்தக் கருத்து, அணிக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இது குறித்த நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். இதனால் இந்திய ஓய்வறை சூழல் ஒருபோதும் பாதிக்காது, அங்கு ஏற்படுத்தப்பட்ட உணர்வு இதனால் ஒன்றும் ஆகிவிடாது. இது முழுக்க முழுக்க தனிப்பட்ட அவர்களது சொந்தக் கருத்து, நான் ஏற்கெனவே கூறியது போல் அவர்கள் கருத்து முறையற்றது.

என்றார் கோலி.

இதனால் முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோலி, “அணிச்சேர்க்கை விஷயத்தில் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். இதில் நம் கையில் எதுவும் இல்லை ஆகவே என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதற்கேற்ப அணியில் மாற்றமிருக்கும். முடிவு வரட்டும் பிறகு இந்த ஒட்டுமொத்த சூழ்நிலைக்கும் என்ன செய்வது என்பதை நாங்கள் முடிவெடுப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in