

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் எடுத்தது. அதேவேளையில் இங் கிலாந்து அணி 77 ரன்களுக்கு சுருண்டது. 212 ரன்கள் முன்னிலை யுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 103.1 ஓவர்களில் 415 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 202 ரன்களும், டவுரிச் 116 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 628 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தில் 80.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 84, ஜானி பேர்ஸ்டோவ் 30, பென் ஸ்டோக்ஸ் 34 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் ராஸ்டன் சேஸ் 8 விக்கெட்கள் வீழ்த்தினார்.
381 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ஜேசன் ஹோல்டர் தேர்வானார்.