

நியூஸிலாந்து மவுண்ட் மாங்குனியில் நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இறங்கி 13 பந்துகளில் 47 ரன்கள் விளாசியதில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்கள் குவித்து இலங்கையை மண்ணைக் கவ்வச் செய்தது.
இன்னிங்சின் 49வது ஓவரை இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா வீச, ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்தார் ஜேம்ஸ் நீஷம். கடைசி பந்தும் சிக்சர் பந்துதான் ஆனால் நீஷமுக்கு அது சரியாகச் சிக்கவில்லை ஒரு ரன் தான் வந்தது.
முதல் பந்தை ஆஃப் ஸ்டம்பிலிருந்து எடுத்து ஒரு சுழற்று சுழற்ற லாங் ஆன் மிட்விக்கெட் இடையே சிக்ஸ்.
மீண்டும் அதே போன்ற பந்து அதே இடத்தில் 2வது சிக்ஸ்.
அடுத்த பந்தும் ஃபுல் லெந்தில் வீச ஒரு காலை ஒதுக்கிக் கொண்டு நேராக 3வது சிக்ஸ்.
4வது பந்து புல்டாஸ் மீண்டும் லாங் ஆன் மிட்விக்கெட் இடையே பந்து சிக்சருக்குக் கதறியது.
5வது பந்து நோ-பால் ஆனது அதில் 2 ரன்கள். அதாவது நோ-பாலையும் சேர்த்து 3 ரன்கள்.
அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் லெந்த் சரியில்லை. மீண்டும் ஒரே அடி அடித்தார் பந்து மைதானத்தின் மேற்கூரைக்குச் சென்றது 5வது சிக்ஸ்.
6வது பந்துக்கு முன்பாக மலிங்கா, பெரேரா விவாதித்தனர், ஆனாலும் பயனில்லை மீண்டும் ஃபுல் லெந்த், இதையும் சிக்சர் அடித்திருக்கலாம் ஆனால் நீஷம் மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க 1 ரன் தன கிடைத்தது. ஆகவே 31 ரன்கள். 6 சிக்சர் அடிக்கும் வாய்ப்பை நீஷம் தவறவிட்டார்.
திசர பெரேரா 9-0-46-2 என்று இருந்தவர் 10 ஓவர் 80 ரன்கள் 2 விக்கெட் என்று அவரது பந்து வீச்சு சின்னாபின்னமானது.