

நிதானத்துக்கும் விவேகத்துக்கும் புகழ் பெற்றவர் தோனி, ஆனால் அவரும் சில வேளைகளில் கோபமடைவார், அது எப்போதும் இந்திய அணி சார்ந்த வீரர்கள் மீதுதான் அவர் கோபப்படுவார்.
அடிலெய்ட் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 299 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை கடும் உஷ்ணத்தில் துரத்தி வந்தது, கோலி ஆட்டமிழந்த பிறகு தோனிக்கு சதைப்பிடிப்பு ஏற்பட்டது, மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் குறைந்தன, இதனால் கடுமையாக களைப்படைந்தார். அந்த நிலையில் தோனி ஆட்டமிழந்திருந்தால் புதிதாக வரும் வீரர்கள் ஆடுவது கடினமாகவே இருந்திருக்கும்.
அப்போதுதான் தினேஷ் கார்த்திக் இறங்கி ரன்களை வேகமாக ஓடிக்கொண்டிருந்தார். இதனாலும் தோனி களைப்படைந்தார். களத்துக்கு மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்க வேண்டி வந்தது.
அப்போது 2 ஓவர்கள் மீதமுள்ளன 16 ரன்கள் தேவையாக இருந்தது.
அப்போதுதான் பதிலி வீரர் கலீல் அகமெட், சாஹல் இருவரும் தண்ணீர் சீசாக்களுடன் மைதானத்துக்குள் வந்தனர். அப்போது கலீல் அகமெட் உணர்ச்சி வசப்பட்டு அவசரத்தில் பிட்சில் நடந்து சென்று தோனியிடம் வந்தார்.
இதைப்பார்த்த தோனி கடுப்பானார், பிட்சில் நடந்து வருவது கூடாது, மேலும் ஸ்பைக் ஷூ பிட்சை சேதம் செய்தாலும் செய்யலாம். இதைப் பார்த்தவுடன் தோனி பிட்சிலா வருவது சுற்றி வா என்று சற்றே கோபமாகச் செய்கை செய்த காணொலி சமூகவலைத்தளங்களில் வைரலானது.
சில ரசிகர்கள் கலீல் அகமெடை தோனி திட்டியதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர் மணீஷ் பாண்டே சோம்பி நின்ற போது தோனி ஒரு முறை கடிந்து கொண்டது நினைவிருக்கலாம். அதாவது 2வது ரன்னுக்கு பாண்டே வரவில்லை அப்போது இதனால் தோனி கோபமடைந்தார். தற்போது கலீல் அகமெட் பிட்சில் நடந்து வந்து தோனியின் கோபத்துக்கு ஆளானார்.