Last Updated : 20 Jan, 2019 06:24 PM

 

Published : 20 Jan 2019 06:24 PM
Last Updated : 20 Jan 2019 06:24 PM

அடுத்து சாதனையை நோக்கி இந்திய அணி: ஆக்லாந்தில் இறங்கியது கோலி படை

ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கவகையில் டெஸ்ட், ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியஅணி அடுத்த சாதனை படைப்பதற்காக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றுள்ளது.

நியூசிலாந்தில் 3 வாரங்கள் தங்கும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித்தொடரில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி ஆக்லாந்தில் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. 26, 28-ம் தேதிகளில் தாரங்காவிலும், 31-ம் தேதி ஹேமில்டனில் 4-வது போட்டியும், பிப்ரவரி 3-ம் தேதி வெலிங்டனில் கடைசிப் போட்டியும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

டி20 போட்டிகள் வெலிங்டனில் பிப்ரவரி 6-ம் தேதி முதல் போட்டியும், ஆக்லாந்தில் 8-ம் தேதி 2-வது போட்டியும், ஹேமில்டனில் 10-ம் தேதி 3-வது போட்டியும் நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும்.

ஆக்லாந்து விமானநிலையத்தில் இந்திய அணியினர் இறங்கியதும், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தனர். விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றார். இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது.

நியூசிலாந்தில் இதுவரை பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் ஒருமுறை மட்டும் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இருமுறை தொடரை சமன் செய்துள்ளது. 4முறை நியூசிலாந்து தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவில் சாதித்ததுபோன்று, நியூசிலாந்திலும் வெற்றிக்கொடி நாட்ட இந்திய அணி ஆக்லாந்தில் தரையிறங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x