Published : 23 Jan 2019 02:03 PM
Last Updated : 23 Jan 2019 02:03 PM

நானே பொறுப்பு; சில விஷயங்கள் எல்லை மீறிவிட்டன- ஹர்திக், ராகுல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கரண் ஜோஹர்

 

'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஒழுங்கு நடவடிக்கைக்கு  ஹர்திக் பாண்டியா, ராகுல் உள்ளான நிலையில், நிகழ்வுக்கு நானே பொறுப்பு என அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அப்போது, அவர்கள் இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, பல பெண்களுடன் பாலியல் ரீதியிலான தொடர்பில் இருந்ததாகவும் அதைத் தனது வீட்டில் தயக்கமில்லாமல் சொல்வதாகவும் கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதப்பொருளானது.

 

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரினார் ஹர்திக் பாண்டியா.

 

இதையடுத்து, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராகுல், பாண்டியா இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இருவரும் நாடு திரும்ப உத்தரவிட்டு, ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரியது.

 

இந்தச் சம்பவத்துக்குப்பின் ஹர்திக் பாண்டியாவின் ஜிம்கானா கிளப் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது, ஜில்லெட் நிறுவனம் தனது விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது.

 

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானது குறித்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரண் ஜோஹர் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

 

இந்நிலையில் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த கரண், ''அவர்களை நான்தான் விருந்தினர்களாக அழைத்தேன். அதனால் ஏற்பட்ட எதிர்வினைகளுக்கும் தாக்கங்களுக்கும் நானே பொறுப்பு. இந்த நிலையைப் பழையபடி மாற்றிவிட முடியுமா என்று யோசித்து ஏராளமான இரவுகளைத் தூங்காமல் கடந்திருக்கிறேன். நான் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் என்னுடைய கட்டுப்பாட்டை மீறிவிட்டது.

 

நிகழ்ச்சியில் சில விஷயங்கள் எல்லை தாண்டிச் சென்றுவிட்டன. அது என்னுடைய மேடை என்பதால் மன்னிப்பு கோருகிறேன். அவர்கள் இருவருக்கும் நேர்ந்த நிலை குறித்து வருந்துகிறேன்.

 

என்னைத் தற்காத்துக்கொள்ள இதைச் சொல்லவில்லை. ஆனால் இந்தக் கேள்விகள் அனைத்தும் பெண்கள் உட்பட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எல்லோரிடமும் வழக்கமாகக் கேட்பவைதான். எப்போதுமே விருந்தினர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பிடித்தது, பிடிக்காதது குறித்துக் கேட்பது வழக்கம். சிலரின் பதில்கள் ஹாட்டாக இருக்கும். சிலவற்றில் சுவாரசியம் இருக்காது.

 

கேள்விக்கான பதில்களைத் தடுக்கும் உரிமை எனக்கில்லை. ஹர்திக்கின் கருத்துகள் அப்போது பிரச்சினைக்குரியதாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சியில் எங்களுடன் பணிபுரிந்த 16-17 பெண்கள் யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

 

இன்னும் சிலர் சர்ச்சைகளின் காரணமாக இந்நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறியிருக்கும்; அதனாம் நான் மகிழ்ந்திருப்பேன் என்று நினைக்கின்றனர். ஆனால் இது டிஆர்பி மட்டும் அல்ல. என்னுடைய கேரியர் விளைவு. என்னுடைய கேரியர் அல்ல, அவர்கள் இருவருடைய கேரியர். நான் டிஆர்பி குறித்துக் கவலைப் படவில்லை.

 

உறுதியான ஒரு பெண்ணால் நான் வளர்க்கப்பட்டேன். என்னுடைய பெண் உறவினர்களும் வலிமையானவர்கள்தாம். பெண்களின் சக்தியை நம்புகிறேன். அவர்களால் இந்த சமூகமும் உலகமும் அடையும் வளர்ச்சி குறித்தும் தெரியும்.

 

பெண்களைக் குற்றம் சாட்டும் எண்ணம் எனக்கில்லை. இனி வரும் எபிசோடுகளில் கவனமாக இருப்பேன்'' என்றார் கரண் ஜோஹர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x