Last Updated : 21 Jan, 2019 02:17 PM

 

Published : 21 Jan 2019 02:17 PM
Last Updated : 21 Jan 2019 02:17 PM

பழைய தோனியாக பழிவாங்க வந்துவிட்டார்: ஆலன் பார்டர் புகழாரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பழைய தோனியாக மாறி பழிவாங்க வந்துவிட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு தோனிக்கு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். கடந்த ஆண்டில் 300 ரன்களுக்குள்ளாகவே சேர்த்த தோனி சராசரியாக 30 ரன்கள்கூட வைக்காமல் அனைவரின் விமர்சனங்களுக்கும் ஆளாகினார். ஆனால், 2019-ம் ஆண்டை 3 அரை சதங்களுடன் அமர்க்களமாக தோனி தொடங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தோனி 51, 55, 87 ரன்கள் என 193 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை ஒரு ஆண்டுக்குப் பின் பெற்றார்.

தோனியின் அபாரமான ஆட்டத்தையும், இந்திய அணிக்கு வெற்றிகரமாக அமைந்த ஆஸ்திரேலியத் தொடரையும் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ஒருநாள் தொடரை நாங்கள் வென்று, சமன் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பழைய தோனியாக பழிவாங்க வந்துவிட்டார். கடந்த முறை பயணத்துக்கு எங்களை இந்தப் பயணத்தில் தோனி பழிதீர்த்து விட்டார். அனைத்துப் போட்டிகளிலும் தோனியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. கடைசி இரு போட்டிகளிலும் அவரின் பேட்டிங் மிகவும் பொறுப்புள்ளதாக அமைந்தது.

உலகின் தலைசிறந்த அணியாக இந்தியா இப்போது இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கடந்த 12 மாதங்களாக எங்கள் நாட்டு அணியில் பல்வேறு சிக்கல் இருந்ததால், சிறப்பாக விளையாட முடியவில்லை. குறிப்பாக சில நல்ல வீரர்கள் அணியில் இல்லை.

ஐபிஎல் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக டி20 போட்டியில் நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால், அதிலும் இந்திய அணி எங்களுக்கு கடும் போட்டி அளித்தார்கள். டெஸ்ட் போட்டிகளில் தாங்கள் உலகத் தரம்வாய்ந்த அணி என்பதை இந்திய அணி நிரூபித்து விட்டார்கள். வழக்கமாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துத்தான் மற்ற அணியை தோற்கடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இந்த முறை வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

நாங்கள் இந்தியாவுக்குச் சென்றால் சுழற்பந்துவீச்சு மூலம் எங்களை இந்திய அணி தோற்கடிக்கும். அவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்தால், வேகப்பந்துவீச்சு மூலம் அவர்களை நாங்கள் தோற்கடிப்போம். இந்த முறை அனைத்தும் மாறிவிட்டது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி மிகச்சிறப்பாக அனைத்துத் துறைகளிலும் செயல்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் ஆட்டம் மிக அற்புதமாக அமைந்திருந்தது.

கேப்டன் விராட் கோலி இதேபோன்ற உடற்தகுதியோடு தொடர்ந்து விளையாடினால், சச்சின் டெண்டுல்கரின் அனைத்துச் சாதனைகளையும் முறியடிப்பார் என்று நம்புகிறேன். 3 விதமான போட்டிகளிலும்விராட் கோலி சராசரியாக 50 ரன்களுக்கு மேல் வைத்திருப்பது வியப்புக்குரியதாகும்.

இந்த கோடைகாலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிர்பாராதவிதமாக அமைந்துவிட்டது. சில மாற்றங்களை உலகக்கோப்பைக்கு முன்பாகச் செய்ய வேண்டும். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், சில குறிப்பிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் நாங்கள் விளையாடினோம்.

உலகில் ஸ்மித் மிகச்சிறந்த வீரர் என்பதை மறுக்க இயலாது. இந்திய அணியில் விராட் கோலி இல்லாமல் அணி எவ்வாறு திணறுமோ அதுபோலத்தான் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் இல்லாத வெற்றிடத்தை உணர்கிறார்கள். வார்னர் இல்லாத விளைவை அணி நிர்வாகம் உணர்கிறது.

ஒட்டுமொத்தத்தில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியப் பயணம் மிகச்சிறப்பாக முதல்முறை அமைந்திருக்கிறது. எப்போதுமே சிறந்த அணிதான் வெற்றிக்குத் தகுதியானவர்கள். அது இந்த முறை இந்திய அணிக்குத்தான் பொருந்தும்''.

இவ்வாறு ஆலன் பார்டர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x