இந்தியன் சூப்பர் லீக்: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - டி.எப்.ஏ. தலைவர் பதில்

இந்தியன் சூப்பர் லீக்: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - டி.எப்.ஏ. தலைவர் பதில்
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னை சார்பில் பங்கேற்கவுள்ள அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பை பெற்று தருவதற்காக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் (டிஎப்ஏ) புதிய தலைவர் ஜேசையா வில்லவராயர் தெரிவித்தார்.

டிஎப்ஏவின் 2014-18-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தலைவராக ஜே.ஜேசையா வில்லவராயரும், துணைத் தலைவர்களாக டி.தனுஷ்கோடி, என்.பாலசுப்பிரமணி, ஜி.சுந்தரராஜன், கே.மணி, கே.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பொருளாளராக ஏ.கண்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளராக பி.ரவிக்குமார் டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜேசையாவிடம், ஐஎஸ்எல்லில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அணிகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் சென்னை சார்பில் பங்கேற்கவுள்ள அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெறவில்லையே என கேட்டபோது, “இது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம்” என்றார்.

கடந்த காலங்களில் சந்தோஷ் டிராபி போட்டி தொடங்கும் நேரத்திலேயே தமிழக அணியின் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சென்னை லீக் போட்டிக்கு முன்னதாக சந்தோஷ் டிராபிக்கான பயிற்சியாளர் நியமிக்கப்பட்டால் சிறந்த அணியைத் தேர்வு செய்ய முடியும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டபோது, “இது தொடர்பாக செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in