

அடிலெய்டில் நடந்து வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது.
2-வது போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்தான் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த முதல் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பெரும்பாலும் 2-வது ஆட்டத்திலும் விளையாடுகின்றனர். வேகப்பந்துவீச்சில் கலீல் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஒரே மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்செய்து. ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் காரே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே புவனேஷ் குமாரும், ஷமியும் மிகுந்த கட்டுக்கோப்புடனும், துல்லியமாகவும் பந்துவீசினார்கள். இதனால், ரன் சேர்க்க ஆஸி. பேட்ஸ்மேன்கள் பிஞ்ச், காரே திணறினார்கள்.
கடந்த போட்டியைப் போன்று இந்த ஆட்டத்திலும் பிஞ்ச் சோபிக்கவில்லை. புவனேஷ்குமார் வீசிய 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். பிஞ்ச் 6 ரன்னில் நடையைக் கட்டினார்.
அடுத்த ஓவரை ஷமி வீசினார். ஷமி பந்தை பவுன்ஸராக வீசிய அதை ஹூக் ஷாட் அடிக்க கரே முயன்றார். ஆனால், பந்து ஷிகர்தவணின் கைகளில் தஞ்சமடைந்தது. ஆஸி. 2-வது விக்கெட்டை இழந்தது. காரே 18 ரன்களில் நடையைக் கட்டினார்.
உஸ்மான் கவாஜா 8 ரன்களிலும், ஷான் மார்ஷ் 9 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்துத் திணறிவருகிறது.