

பெர்த்தில் நேற்று நடந்த பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் பந்துவீச்சாளர் 7-வது பந்துவீசியபோது, அதைத் தடுக்காமல் விக்கெட் விழுந்தபோது அவுட் அளித்த நடுவரின் முடிவால் பேட்ஸ்மேன் அதிர்ச்சியுடன் வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பிக்பாஷ் லீக் டி20 போட்டி நடந்து வருகிறது. பெர்த் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியும், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி களமிறங்கியது.
ஆட்டத்தை பான்கிராப்ட், மைக்கேல் கிளிங்கர் தொடங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரை துவார்ஹியூஸ் வீசினார். 6 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஓவர் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 7-வது பந்தையும் துவார்ஹியுஸ் வீசினார். அந்தப் பந்தை சந்தித்த கிளிங்கர் அதை தேர்டு மேன் திசையில் தூக்கி அடிக்க ஓ கீப் கைகளில் கேட்சாக மாறியதால் ஆட்டமிழந்தார்.
ஆனால், இந்த கேட்ச் பிடிக்கப்பட்டவிதம் சர்ச்சைக்குள்ளானதாக இருந்ததால், அதுகுறித்து மூன்றாவது நடுவருக்கு கள நடுவர் பரிந்துரை செய்தார். இந்த கேட்சை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர்கள் இது கேட்ச் என்று உறுதி செய்தனர். ஆனால், ஏற்கெனவே ஓவர் முடிந்துவிட்டதுகூட அறியாமல் கள நடுவர் அவுட் என்று அறிவித்துவிட்டார்.
ஆனால், மூன்றாவது நடுவரிடம் அவுட் குறித்துகேட்டபோதுதான், 7-வது பந்து வீசப்பட்டதை பேட்ஸ்மேன்கள் உணர்ந்தனர். ஆனால், கள நடுவர் அவுட் அளித்ததைத் தொடர்ந்து நடுவரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துவிட்டு கிளிங்கர் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.
நடுவராக இருந்து பணியாற்றும் ஒருவர், அவுட், நோபால் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் கண்காணிப்பதோடு, பந்துகள் வீசப்பட்ட எண்ணிக்கையையும் கணக்கில் கொள்வது அவசியமாகும். கிரிக்கெட்டில் 7-வது பந்து என்பது விதிகளில் இல்லாத ஒன்றாகும், அவ்வாறு வீசப்பட்ட பந்தில் அவுட் அளித்ததும் செல்லாது.
இருப்பினும் இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வீழ்த்தியது. பான்கிராப்ட் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் சேர்த்தார், கேப்டன் டர்னர் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஒருவேளை இந்தப் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தால் நடுவரின் முடிவு விவாதப்பொருளாகி இருக்கும்.